`ஊழல் செய்து நாட்டைச் சுடுகாடாக்குகிறார்கள்!'- வீட்டில் நோட்டீஸ் ஒட்டி வேட்பாளர்களை அதிரவைக்கும் ஆசிரியை! | "Our vote is not for sale!" - The teacher who sticks notice in her house

வெளியிடப்பட்ட நேரம்: 12:27 (12/04/2019)

கடைசி தொடர்பு:12:27 (12/04/2019)

`ஊழல் செய்து நாட்டைச் சுடுகாடாக்குகிறார்கள்!'- வீட்டில் நோட்டீஸ் ஒட்டி வேட்பாளர்களை அதிரவைக்கும் ஆசிரியை!

வரும் 18-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும், `பணத்தைக் கொடுத்து, வாக்குகளை கறந்துடுவோம்' என்று கச்சைக்கட்டி வருகிறார்கள். இந்நிலையில், 'எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல' என்று தனது வீட்டுக் கேட்டில் நோட்டீஸ் அடித்து ஒட்டி, அரசியல் கட்சிகளை அதிரவைத்துள்ளார் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர்.

அந்த நோட்டீஸ்

கரூர் மாவட்டம், குளித்தலை பெரியார் நகரில் வசித்து வரும் பிருந்தா என்ற ஆசிரியைதான், தனது வீட்டுக் கேட்டில் வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை வாசகம் ஒட்டியிருக்கும் அரசுப்பள்ளி ஆசிரியை. குளித்தலை ஒன்றியத்தில் உள்ள மேலக்குட்டப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிவருகிறார் பிருந்தா. குளித்தலை சட்டமன்றத் தொகுதி பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. இப்படி வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கும் ஆசிரியை பிருந்தா பூபதியிடம் பேசினோம்.

``கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல், இப்போ இந்த நாடாளுமன்றத் தேர்தல்னு தொடர்ச்சியாக நாங்க இப்படி, `எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல'னு நோட்டீஸ் ஒட்டி வருகிறோம். நமது நாடு ஜனநாயக நாடு. நம்மை ஆள்பவர்களை தீர்மானிக்கும் உரிமை நமக்கு வழங்கப்பட்டுள்ளது. நமது தலையெழுத்தை தீர்மானிக்கும் சக்தியாக, நமக்கு வழங்கப்பட்டிருக்கும் நமது வாக்குரிமைதான் இருக்கிறது. ஆனால், `நமக்கு யார் வேண்டும், நம்மை ஆள்வதற்கு யார் தகுதியான ஆள்கள்' என்று தீர்மானிக்கும் விசயமாக நம்மில் பலர் நமது வாக்குரிமையைப் பயன்படுத்துவதில்லை. யார் அதிகம் ஓட்டுக்கு காசு தருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்து, இந்த நாட்டை ஆளும் உரிமையை அவர்களுக்கு வழங்குகிறோம். ஆனால், அவர்கள் வாக்களித்த நமக்கு ஒன்றும் செய்வதில்லை. ஊழல் மேல் ஊழல் செய்து, நாட்டைச் சுடுகாடாக்குகிறார்கள். வாக்களித்த மக்களை பார்க்ககூட அவர்கள் வருவதில்லை. காரணம், `அடுத்த தேர்தலப்போ போய் காசு கொடுத்தால், நமக்கே ஓட்டு போடப்போகிறார்கள்' என்ற நினைப்புதான், அவர்களுக்கு சாதகமாக மாறுகிறது.

பிருந்தா தனது கணவர் பூபதியோடு...

ஆனால், வாக்களித்த நம்மை அவர்கள் எவ்வளவு கேவலமாக நினைக்கிறார்கள் என்பதை உணராமல் மறுபடியும் மறுபடியும், காசு அதிகம் கொடுப்பவர்களுக்கே நாம் வாக்களிக்கிறோம். அதிகமாக காசு கொடுப்பவர்கள், அதிகமாகதான் கொள்ளையடிப்பார்கள். நாம் எதிர்த்துக் கேள்வி கேட்டால்கூட, `காசு கொடுத்துதான் உங்க ஓட்டை வாங்கி இருக்கிறோம்' என்று நம் வாயை அடைப்பார்கள். அதனால், மக்களுக்கு விழிப்புணர்வு வரவும், நாம் நமது வாக்கை விற்பதில்லை என்று உணர்த்தவும்தான், இப்படி எழுதி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். தேர்தல் ஆணையம் இப்படி விழிப்புணர்வு எற்படுத்துவதற்கு முன்பே நாங்க எங்கள் வீட்டில் இப்படி, `எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல'னு எழுதி வைக்க ஆரம்பித்துவிட்டோம். இதனால், எங்க வீட்டுக்கு காசுகொடுக்க எந்த வேட்பாளர்களும் வரமாட்டாங்க. என் கணவர் பூபதியும் அரசுப்பள்ளி ஆசிரியர்தான். அவரும், நானும் ஒருமித்தக் கருத்தோடு, இந்த விழிப்புணர்வைச் தொடர்ந்து எல்லாத் தேர்தல்களிலும் செய்கிறோம். எங்களைப் பார்த்து இன்னும் சிலரும், இப்படி தங்கள் வீட்டின் முன்பு, 'எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல'னு நோட்டீஸ் ஒட்டுறாங்க" என்றார்.
 
பணம் கொடுத்து வாக்குகளை பெற்றுவிடலாம் என்று நினைக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஆசிரியை பிருந்தாவின் இந்த நோட்டீஸ் அதிரவைத்துள்ளது. சபாஷ்!