`பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து விசாரிக்கலாம்.... ஆனால்?’- உச்சநீதிமன்றம் வைத்த செக் | Supreme Court Verdict on Pon.manikkavel Issue

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (12/04/2019)

கடைசி தொடர்பு:12:32 (12/04/2019)

`பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து விசாரிக்கலாம்.... ஆனால்?’- உச்சநீதிமன்றம் வைத்த செக்

சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

பொன்.மாணிக்கவேல்

தமிழகத்தில் சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது. இந்த நியமனத்துக்குத் தடை விதிக்கக் கோரியும், சிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. வழக்கு விசாரணையின்போதே பொன். மாணிக்கவேல் நியமனத்துக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் தொடர்ந்த வழக்கில் விசாரணைகள் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த நிலையில், சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் தொடரலாம். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் புதிய ஐ.ஜி-யாக அபய்குமார்சிங்கை தமிழக அரசு நியமித்தது செல்லும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

மேலும், சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டனர். சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியான பொன்.மாணிக்கவேல் வழக்கு பற்றிய விவரங்களை ஐ.ஜி அபய்குமார் சிங்கிடம் அளிக்க வேண்டும். சிலைக் கடத்தல் வழக்குகளில் கைது செய்யும் அதிகாரம் புதிய ஐ.ஜி-யான அபய்குமார் சிங்கிற்குச் செல்கிறது. பொன்.மாணிக்கவேலுக்கு கைது செய்யும் அதிகாரம் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.