`விவசாயக் கடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து!'- திருவாரூரில் வீதிவீதியாக கருணாநிதியின் பேரன் பிரசாரம் | Arulnidhi in campaign ground

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (12/04/2019)

கடைசி தொடர்பு:13:40 (12/04/2019)

`விவசாயக் கடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து!'- திருவாரூரில் வீதிவீதியாக கருணாநிதியின் பேரன் பிரசாரம்

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பூண்டி கலைவாணனை ஆதரித்து கருணாநிதியின் மகன் மு.க தமிழரசு, பேரனும் நடிகருமான அருள்நிதி ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அருள்நிதி

தமிழகத்தில் வரும் 18-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி இறந்ததால் திருவாரூரிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனால் திருவாரூர் தொகுதியானது எல்லோரின் கவனத்தையும் ஈர்க்கும் தொகுதியாக உள்ளது. எனவே, முக்கிய தலைவர்கள் மற்றும் கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் திருவாரூர் தொகுதியில் பிரசாரம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

வாக்கு சேகரிப்பு 

இந்த நிலையில் திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவு தெரிவித்து திருவாரூர் நகர் பகுதிகளில் மு.க தமிழரசு, நடிகர் அருள்நிதி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தி.மு.க-வினர் நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காலையில் தொடங்கிய பிரசாரத்தில் முதலில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தனர். இதைத்தொடர்ந்து திருவாரூரின் முக்கிய வீதிகள், பேருந்து நிலையம் எனப் பிரசாரம் செய்துவந்தனர்.

பிரசாரம்

மக்களிடம் சென்று வாக்கு சேகரிக்கும்போது தி.மு.க தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ள விவசாயிகளின் கடன் தள்ளுபடி, மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி, நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படும் உள்ளிட்ட முக்கிய அம்சங்களைக் கொண்ட துண்டுப் பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு பொதுமக்களிடம் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக திருவாரூர் நகர் பகுதியான நெய்விளக்கு தோப்பு பகுதியில் பொதுமக்கள் வெடி வெடித்து ஆராத்தி எடுத்து மலர் மாலை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர். தந்தையின் தொகுதி என்பதால் மு.க தமிழரசு மகிழ்ச்சியோடு பிரசாரம் செய்தார்.