இரவில் பணப்பட்டுவாடா மோதல்; காலையில் பெட்ரோல் குண்டு வீச்சு- மத்திய சென்னையில் விடியவிடிய பதற்றம் | In money distribution, fight between the parties

வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (12/04/2019)

கடைசி தொடர்பு:13:16 (12/04/2019)

இரவில் பணப்பட்டுவாடா மோதல்; காலையில் பெட்ரோல் குண்டு வீச்சு- மத்திய சென்னையில் விடியவிடிய பதற்றம்

மத்திய சென்னை தொகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினரும் தினகரன் கட்சியினரும் பணம் பட்டுவாடா செய்ததாக தி.மு.க-வினர் குற்றம் சாட்டுகின்றனர். அப்போது நடந்த தகராறு தொடர்பாக அமைந்தகரை காவல் நிலையத்தில் தி.மு.க. மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சிகளைச் சேர்ந்தவர்கள் புகார் கொடுத்துள்ளனர். விடிய விடிய நடந்த பஞ்சாயத்துக்குப்பிறகு கட்சியினர் வீடு திரும்பினர். காலையில் தி.மு.க.பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் மத்திய சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. பிரமுகரின் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும், டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியில் கூட்டணி வகிக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில்  தெஹ்லான் பாகவி, மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கமிலாநாசரும்  போட்டியிடுகின்றனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியினரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரும் அமைந்தகரை பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக தி.மு.க-வினரும் ஓட்டு கேட்டுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அண்ணாநகர் தொகுதி தலைவர் நூர்முகம்மது அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், `அண்ணாநகர் தொகுதிக்கு உட்பட்ட மஞ்சகொல்லை திருவிதி அம்மன் கோயில் தெருவில் எஸ்.டி.பி.ஐ சார்பில் ஜெரீனா, மஞ்சுளாதேவி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தி.மு.க. பகுதிச் செயலாளர் பரமசிவம் தலைமையில் 30-க்கும் மேற்பட்டவர்கள் 7 காரில் அங்கு வந்துள்ளனர். அமைதியாக பிரசாரம் செய்துகொண்டிருந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த பெண்களிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர் பெண்களை ஓட ஓட விரட்டிய தி.மு.க.வினர், கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. பிரமுகரின் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

எஸ்.டி.பி.ஐ. கட்சியினரின் குற்றச்சாட்டுக்களை தி.மு.க. பகுதிச் செயலாளர் பரமசிவம் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ``பிரசாரத்துக்காக நாங்கள் அமைந்தகரை பகுதியில் சென்றபோது எஸ்.டி.பி.ஐ கட்சியினரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரும் ஓட்டுக்குப் பணம் கொடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களை தி.மு.க-வினர் மடக்கிப்பிடித்து வைத்திருந்தனர். அவர்களிடம் சிறுபான்மை மக்களுக்காகத்தான் தி.மு.க பாடுபடுகிறது. இனிமேல் ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் உங்களை போலீஸில் பிடித்துக் கொடுத்துவிடுவேன் என்று கூறினேன். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரும்தான் எங்களிடம் தகராறு செய்தனர். தி.மு.க. மகளிரணியினரை கடுமையாகத் தாக்கினர். அதில் சிலருக்கு காயம் ஏற்பட்டு அவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் மீது அந்தக்கட்சியினர் புகார் கொடுத்ததும் நாங்களும் அவர்கள் மீது அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால், அதிகாலை 3 மணி வரை காவல் நிலையத்தில்தான் இருந்தோம். யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. என்னைக் கைது செய்ய எஸ்.டி.பி.ஐ கட்சியினர் வலியுறுத்தினர். 

காவல் நிலையத்திலிருந்து அதிகாலையில் வீட்டுக்கு வந்தேன். மாலை 6 மணியளவில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பைக்கில் வந்தவர்கள் பெட்ரோல் குண்டு வீசும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதுதொடர்பாக டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம். பெட்ரோல் குண்டை எஸ்.டி.பி.ஐ மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் வீசியிருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும் சூழல் உள்ளது. இதனால்தான் எங்களை மிரட்ட இதுபோன்ற செயல்களில் எதிர்க்கட்சியினர் ஈடுபடுகின்றனர். அதற்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம். பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். 

 பெட்ரோல் குண்டுவீசிய மர்ம நபர்கள்

இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதிமாறன், பகுதிச் செயலாளர் பரமசிவன் வீட்டுக்கு வந்தார். அதன்பிறகு தி.மு.க-வினர் பெட்ரோல் குண்டு வீசியவர்களை `கைது செய், கைது செய்' என்று கோஷமிட்டனர்.

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம்மிடம் கேட்டதற்கு,`` பிரசாரத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த பெண்கள் மீது தாக்குதல் சம்பவத்தில் தி.மு.க-வினர் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஜெரீனா, மஞ்சுளாதேவி ஆகியோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஓட்டுக்குப் பணம் கொடுத்ததாக எங்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை தி.மு.க-வினர் சொல்கின்றனர். பிரசாரத்துக்குச் சென்ற பெண்களிடம் அநாகரிகமாக தி.மு.க-வினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது தி.மு.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை" என்றார். 

 தி.மு.க. பகுதிச் செயலாளர் பரமசிவம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் மத்திய சென்னை தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீஸார் எடுத்துள்ளனர்.