தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; ஒருநபர் ஆணையத்தின் 10-வது கட்ட விசாரணை நிறைவு! | one person commission complete her 10th phase of investigation of thoothukudi gunfire

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (12/04/2019)

கடைசி தொடர்பு:13:50 (12/04/2019)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; ஒருநபர் ஆணையத்தின் 10-வது கட்ட விசாரணை நிறைவு!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஒருநபர் ஆணையம், தனது 10-வது கட்ட விசாரணையை நிறைவு செய்துள்ளது. இதுவரை 268 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

 ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் கடந்த மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து, உள்ளிருப்புப் போரட்டத்தில் ஈடுபடுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்போது, ஏற்பட்ட திடீர் கலவரத்தால் போலீஸார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திட தமிழக அரசு சார்பில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை நியமித்தது தமிழக அரசு. கடந்த ஜூன் 4-ம் தேதி முதல் விசாரணை தொடங்கியது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், உடல் உறுப்புகளை இழந்தவர்கள், காயம்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், இச்சம்பவம் தொடர்பாக பிரமாணம் அளித்தவர்கள், உயிரிழந்தவர்களின் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள், சம்பவத்தின்போது பணியில் இருந்த அதிகாரிகள் எனப் பல தரப்பினருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 10 கட்ட விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது. 10வது கட்ட விசாரணையில் 47 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. கடந்த 3 நாள்களாக நடைபெற்ற இந்த விசாரணையில் 22 பேர் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 268 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணை மே 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.    

நீங்க எப்படி பீல் பண்றீங்க