`வேட்பாளர்கள் நிற்கலாமா... உட்காரலாமா..!' - ஸ்டாலின், அன்புமணி பிரசாரக் காட்சிகள் | Anbumani and stalin was compared in approaching candidates

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (12/04/2019)

கடைசி தொடர்பு:14:10 (12/04/2019)

`வேட்பாளர்கள் நிற்கலாமா... உட்காரலாமா..!' - ஸ்டாலின், அன்புமணி பிரசாரக் காட்சிகள்

17-வது மக்களவைத் தேர்தல் விழா நாடெங்கும் களைகட்டியிருக்கிறது. தமிழகம், புதுச்சேரியை உள்ளடக்கிய 40 தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளார்களை ஆதரித்து தலைவர்கள் சூறாவளிப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு ஆரணி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் சேவல் ஏழுமலையை ஆதரித்து வாக்கு சேகரித்தார் அன்புமணி. அப்போது, வேட்பாளர் சேவல் ஏழுமலை அந்தப் பொதுக்கூட்ட மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

புதுச்சேரியில் ஸ்டாலின் பிரசாரம்

அதைப் பார்த்து ஆவேசமான அன்புமணி, ``உங்களுக்காக பிரசாரம் செய்ய வந்த நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். நீங்கள் சொகுசாக உட்கார்ந்துகொண்டிருக்கிறீர்களா” என்று கோபத்துடன் கூற பதறிப் போனார் சிட்டிங் எம்.பியான ஏழுமலை. உடனே சுதாரித்துக்கொண்ட அவர் சேரில் இருந்து எழுந்துவந்து அன்புமணியின் அருகில் வந்து நின்றார். தொடர்ந்து, ``இங்கு(மக்களை காட்டி) அனைவரும் வெயிலில் நின்றுகொண்டு இருக்கிறார்கள். ஆனால், நீங்கள் சொகுசாக அமர்ந்துகொண்டிருக்கிறீர்களா. இனிமேல் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நீங்கள் உட்காரவே கூடாது” என்று அன்புமணி மீண்டும் மிரட்டும் தொனியில் பேசியதால் எம்.பி சேவல் ஏழுமலையின் முகம் வாடிப் போனது.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் முன்னாள் முதல்வரும், சபாநாயகருமான வைத்திலிங்கமும், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் வெங்கடேசனும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரையும் ஆதரித்து வாக்கு சேகரிக்க நேற்று புதுச்சேரிக்கு வருகை தந்திருந்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். பிரசார பொதுக்கூட்ட மேடையில் ஸ்டாலின் பேசத் தொடங்கியதும் வைத்திலிங்கமும், வெங்கடேசனும் ஸ்டாலினுக்கு இருபுறமும் நின்றுகொண்டிருந்தனர். அப்போது பேச்சை நிறுத்திய ஸ்டாலின், ``நீங்கள் நிற்க வேண்டாம். சென்று அமருங்கள்” என்று வைத்திலிங்கத்திடம் கூறினார். அதற்கு அவர், ``பரவாயில்லை. நீங்கள் பேசுங்கள்” என்று கூறியதோடு ஸ்டாலின் பேசி முடிக்கும்வரை நின்று கொண்டிருந்தார்.

இந்த நிகழ்வால் அங்கிருந்த காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் நெகிழ்ந்து போனார்கள். அதேசமயம், ``கூட்டணிக் கட்சியின் வேட்பாளராக இருந்தாலும் மூத்த அரசியல் தலைவர், முன்னாள் முதல்வர் என்பதை எல்லாம் கருத்தில்கொண்டு வைத்திலிங்கத்தை அமரச் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். இதன் மூலம் கூட்டணி நாகரிகத்தையும், தனது அரசியல் முதிர்வையும் வெளிப்படுத்தியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். ஆனால், சேவல் ஏழுமலையின் அரசியல் அனுபவத்தை தனது வயதாகக் கொண்ட அன்புமணி, சிட்டிங் எம்.பி என்றுகூட பாராமல் பொது மேடையில் வசை பாடியிருக்கிறார். அன்புமணி அவர்களே கூட்டணி நாகரிகத்தையும், அரசியல் நாகரிகத்தையும் ஸ்டாலினிடம் கற்றுக்கொள்ளுங்கள்” என்று அரசியல் கட்சிகளுக்கு இடையே விவாதம் நடந்து வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க