``ராகுல் காந்தி முதலில் ஜெயிப்பாரா என்று பார்ப்போம்!” - திருவாரூரில் கமல்ஹாசன் விமர்சனம் | Kamal smashes rahul in his campaign

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (12/04/2019)

கடைசி தொடர்பு:15:11 (12/04/2019)

``ராகுல் காந்தி முதலில் ஜெயிப்பாரா என்று பார்ப்போம்!” - திருவாரூரில் கமல்ஹாசன் விமர்சனம்

திருவாரூர் இடைத்தேர்தல் மற்றும் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தேர்தல்களில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான அருண் சிதம்பரம் மற்றும் குருவையா ஆகியோருக்கு வாக்கு சேகரிக்க திருவாரூர் வருகை தந்தார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். அவர் வருகைக்காகக் காத்திருந்த பொதுமக்கள் மேள தாளம், ஆட்டம் எனக் கொண்டாடினர்.  இதைத் தொடர்ந்து இரவு 9 மணியளவில் வருகை தந்தார் கமல்ஹாசன்.

கமல்ஹாசன்

`திருவாரூருக்கு  என் வணக்கங்கள். திருவாரூர் மக்களுக்கு என் வணக்கங்கள்’ என பிரசாரத்தை தொடங்கினார் கமல்ஹாசன். பின்னர், ``எங்களது எம்.பி-க்களை எம்பி பார்க்க வேண்டிய அவசியமல்ல. நான் அவர்களைத் தலையில் சுமப்பேன் என்றார்.

கமல் பிரசாரம்

நாடெங்கிலும் குப்பைகள் நிறைய உள்ளது. எங்கு பார்த்தாலும் குப்பை. யாரையும் தனியாகச் சொல்லவில்லை. தமிழக அரசியலும் குப்பையாகதான் உள்ளது. அனைத்துக் குப்பைகளையும் அகற்ற வேண்டும். அகற்றினால் நல்லா இருக்கும். விவசாயம் செய்யும் பூமிக்கு அடியில் தங்கத்தையும் வைரத்தையும் எடுக்காதீர்கள். விவசாய நிலத்துக்கு மேல் எதுவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். விளை நிலங்களை வீணாக்க வேண்டாம். தமிழர்களின் உயிரைக் கொல்லும் தொழிற்சாலைகள் வேண்டாம். ஏழைக்கு உதவாத அரசாங்கங்கள் விரைவில் நிச்சயமாகக் கவிழும். வருகின்ற ஏப்ரல் 18 அன்று உங்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பைச் சரியாகப்  பயன்படுத்துங்கள்.

கமல்

தற்போது உள்ள அரசியல் கட்சிகளால் மக்கள் கூட்டத்தை காசு கொடுக்காமல் கூட்ட முடியுமா? முடியாது. ஆனால், நமக்கு கூடியுள்ளது
கூட்டம் காசுக்காக கூடிய கூட்டம் இல்லை. இதுதான் எங்கள் பலம் மக்கள் நீதி மய்யத்தின் பலம். நீங்கள் தேர்தலில் நிற்கவில்லையே எனக் கேட்கிறார்கள். நான் 39 இடங்களிலும் நிற்கிறேன். எங்களது வேட்பாளர்கள் நிற்கும் ஒவ்வொரு தொகுதியிலும் நானும் நிற்பது போல்தான். ராகுல் காந்தி கூட இரண்டு இடங்களில் நிற்கிறார். அவர் ஜெயித்த பின் ஒரு இடம் வேண்டாம் என்று சொல்வார் அது எங்கள் அரசியலல்ல. ராகுல் காந்தி முதலில் ஜெயிப்பாரா என்று பார்ப்போம். பின்னர் எந்த இடம் வேண்டாம் என்று கூறுகிறார்கள் எனப் பார்க்கலாம்” என்று கமல் விமர்சனம் செய்தார்.

எங்களது வேட்பாளர்கள் அனைவரும் படித்தவர்கள் தனித் திறமையாளர்கள். திருவாரூரில் போட்டியிடும் அருண் சிதம்பரம் படித்த ஓர் இயற்கை விவசாயி. 18-ம் தேதி நீங்கள் எங்களுக்கு வாக்களித்தால் நாளை நமதே என பிரசாரத்தை நிறைவு செய்தார்.