`கஷ்டப்பட்டுத்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம்!" - அரசியல்வாதிகளுக்கு ஸ்ரீப்ரியா பதில் | actress sripriya says election campaign and her political party work

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (12/04/2019)

கடைசி தொடர்பு:15:01 (12/04/2019)

`கஷ்டப்பட்டுத்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம்!" - அரசியல்வாதிகளுக்கு ஸ்ரீப்ரியா பதில்

நடிகை ஶ்ரீப்ரியா

தேர்தல் களம் அனல் பறக்கிறது. பிரபலங்கள் பலரும் மக்களைச் சந்தித்து வாக்குக் கேட்டு வருகின்றனர். முதல்முறையாகப் பிரசார களத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் நடிகை ஶ்ரீப்ரியாவிடம், பிரசார அனுபவம் குறித்துப் பேசினோம்.

``நான் மிடிக் கிளாஸ் குடும்பம்தான். என் இளமைக் காலத்தில் வெளியிடங்களுக்கு நடந்துபோவது, பஸ்ஸில் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தேன். நான் சினிமாவில் பிரபலமானப் பிறகும்கூட, ஆடம்பரமான வாழ்க்கையை வாழவில்லை. அப்போதெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் வீட்டிலிருந்தே நாற்காலியைக் கொண்டு வந்து, அதில்தான் உட்காருவார்கள். நான் அப்படியெல்லாம் செய்ததேயில்லை. பிரபலமாக இருந்தபோதுகூட, அம்பாஸிடர் காரைதான் பயன்படுத்தினேன். இப்போதுகூட கார் இல்லாத நேரத்தில், ஆட்டோவில் செல்கிறேன். இதனால் எப்போதுமே மக்களுடன் மக்களாக, மிடில் கிளாஸ் வாழ்க்கையைத்தான் வாழ்கிறேன். அதனால் இப்போது பிரசாரம் செய்வது, அதிக தூரம் நடப்பது, வெயிலில் செல்வதெல்லாம் எனக்குச் சிரமமாகத் தெரியவில்லை. சமீபத்தில் மத்திய சென்னை தொகுதியில் பிரசாரம் செய்தபோது, கீழே விழுந்துவிட்டேன். அதையும் நான் பெரிதாகப் பொருட்படுத்திக்கொள்ளவில்லை. தொடர்ந்து பிரசாரம் செய்துகொண்டிருக்கிறேன்.

ஶ்ரீப்ரியா

`சினிமா பிரபலங்களுக்கு மக்கள் படும் கஷ்டங்கள் பற்றி என்ன தெரியும்' எனப் பல அரசியல்வாதிகள் சொல்வார்கள். நாங்கள் சினிமா தொழிலில் ஆடம்பரமாக இருந்ததில்லை. செருப்புகூட இல்லாமல் கரடு முரடான மலைப் பகுதிகளில் நடித்திருக்கிறோம். மழை, வெயில், பனியில் வேலை செய்திருக்கிறோம். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டுத்தான், புகழ்பெற்றிருக்கிறோம். அவரவர் கஷ்டம் அவரவருக்குத்தான் தெரியும். நடிகர், நடிகைகளின் பலம், மற்ற அரசியல்வாதிகளுக்குத் தெரியாது. மீறி சினிமா பிரபலங்களைக் குறை சொல்பவர்கள், இதற்கு முன்பு தமிழகத்தில் ஆட்சி செய்த சினிமா பிரபலங்களைச் சற்று நினைத்துக்கொள்ள வேண்டும்" என்கிறார் ஶ்ரீப்ரியா.