`வாக்கு கொடுத்திருக்கேன்; கள்ளக்குறிச்சியில் ஜெயிச்சாகணும்!'- நிர்வாகிகளிடம் கறார் காட்டிய எடப்பாடி | we must to win kallakurichi; cm edappadi tells cadres

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (12/04/2019)

கடைசி தொடர்பு:15:05 (12/04/2019)

`வாக்கு கொடுத்திருக்கேன்; கள்ளக்குறிச்சியில் ஜெயிச்சாகணும்!'- நிர்வாகிகளிடம் கறார் காட்டிய எடப்பாடி

கூட்டணிக் கட்சிகளின் நம்பிக்கைக்குரிய தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவாகியிருப்பதாக தே.மு.தி.க. நிர்வாகிகள் புளங்காகிதம் அடைகிறார்கள். கள்ளக்குறிச்சி தொகுதியில் தே.மு.தி.க.வை வெற்றியடைய வைத்தே தீர வேண்டும் என அ.தி.மு.க-வினருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டிப்புடன் கூறியிருப்பதாக தே.மு.தி.க. நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீஷ்

இதுகுறித்து தே.மு.தி.க. தலைமை நிலைய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ``கள்ளக்குறிச்சி தொகுதியில் தே.மு.தி.க. இளைஞரணி தலைவரும், விஜயகாந்த்தின் மைத்துனருமான எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். தி.மு.க. வேட்பாளர் கெளதம சிகாமணிக்கும் இவருக்கும்தான் கடும் போட்டி நிலவுகிறது. இத்தொகுதிக்குள் ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி), கங்கவள்ளி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. தமிழகத்திலேயே மிக அதிகமாக தனித் தொகுதிகள் நிரம்பிய நாடாளுமன்றத் தொகுதி கள்ளக்குறிச்சிதான்.

2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி பார்த்தால், இந்த 6 தொகுதிகளிலும் தே.மு.தி.க.வுக்கு சராசரியாக 15,000 வாக்குகள் உள்ளன. பா.ம.க-வுக்கு 17,000 வாக்குகள் உள்ளன. அ.தி.மு.க-வுக்கு சராசரியாக 80,000 வாக்குகள் உள்ளன. ஏற்காடு தொகுதியில் மட்டும் ஒரு லட்சம் வாக்குகளை அ.தி.மு.க. பெற்றுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் ரிஷிவந்தியம், சங்கராபுரம் இவ்விரண்டை மட்டும்தான் தி.மு.க. வென்றுள்ளது. மற்ற நான்கையும் அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது.

2014 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க-வின் ஈஸ்வரன் போட்டியிட்டபோது 1.64 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளார். 5.33 லட்சம் வாக்குகளைப் பெற்று அ.தி.மு.க-வின் காமராஜ் அத்தேர்தலில் வெற்றி பெற்றார். இப்போது இவ்விரு கட்சிகளும் ஒன்றிணைந்துள்ள நிலையில், இந்த ஓட்டு சதவிகித கணக்குகள் பலனளிக்கும் என நம்புகிறோம். இதுபோக, கெளதம சிகாமணிக்கு சீட் கொடுத்ததால் தி.மு.க.விலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுவும் எங்களுக்குப் பலன்தான்.

எடப்பாடி பழனிசாமியுடன் எல்.கே.சுதீஷ்

சாதகங்கள் நிறைய இருந்தாலும், பழைய கசப்புணர்வை மனதில் வைத்துக்கொண்டு அ.தி.மு.க., பா.ம.க.வைச் சேர்ந்த சில நிர்வாகிகள் செயல்படாமல் இருந்தனர். இதுகுறித்து எடப்பாடியின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். உடனடியாக கள்ளக்குறிச்சி நிர்வாகிகளைப் போனில் அழைத்துப் பேசிய முதல்வர், ‘கள்ளக்குறிச்சியை ஜெயிக்க வைச்சு தர்றேன்னு. நான் வாக்கு கொடுத்திருக்கேன். இது எனக்கு மானப் பிரச்னை. பழைய கசப்பு என்ன இருந்தாலும், அதையெல்லாம் தூக்கிப் போட்டுட்டு வேலைய பாருங்க. கள்ளக்குறிச்சி ஜெயிச்சாகணும்.’ என்று கண்டிப்புடன் கூறினார். இதன் பின்னர்தான் தொகுதிக்குள் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் துடிப்புடன் செயலாற்றுவதை கவனிக்க முடிகிறது” என்றனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் ஆகிய நான்கு தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது. போட்டியிடும் இந்நான்கில், கள்ளக்குறிச்சி மட்டும்தான் வெற்றிக்கு நெருக்கமாக உள்ளதால், இத்தொகுதியையும் கைவிட விஜயகாந்த்தின் குடும்பம் தயாராக இல்லை. இதனால்தான் எடப்பாடி வரையில் தொடர்புகொண்டு தொகுதியின் நிலவரத்தை எடுத்துரைத்தார்களாம். எடப்பாடியின் கண்டிப்பால், தே.மு.தி.க. வட்டாரம் குஷியாகி இருக்கிறது. மக்கள் என்ன முடிவெடுத்திருக்கிறார்கள் என்பது மே 23-ம் தேதி தெரிந்துவிடும்.