45 அடி கிணற்றுக்குள் விழுந்த பேத்தி! - சூப்பர் ஹீரோவாக மாறிய சென்னைப் பாட்டி  | Grand daughter fall in well, and the Grandman saved her

வெளியிடப்பட்ட நேரம்: 14:46 (12/04/2019)

கடைசி தொடர்பு:09:58 (16/04/2019)

45 அடி கிணற்றுக்குள் விழுந்த பேத்தி! - சூப்பர் ஹீரோவாக மாறிய சென்னைப் பாட்டி 

சென்னை பூந்தமல்லியில் 45 அடி கிணற்றுக்குள் ஒன்றரை வயது பேத்தி விழுந்ததைப் பார்த்த அவரின் பாட்டி எதையும் யோசிக்காமல் துணிச்சலாகக் கிணற்றுக்குள் குதித்து பேத்தியைக் காப்பாற்றியுள்ளார். இதனால் இருவரும் உயிரோடு மீட்கப்பட்டனர். சூப்பர் பாட்டியால் ஒன்றரை வயது குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பூந்தமல்லியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. 

கிணற்றுக்குள் விழுந்த பேத்தியை காப்பாற்றிய பாட்டி

சென்னை பூந்தமல்லி கலைமகள் நகர் 1-வது தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார் கிருபாவதி (45). ஆசிரியை. இவரின் மகள் அரிபிரியா. இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர், வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார். இந்தநிலையில் வீட்டின் முன்பகுதியில் உள்ள கிணற்றை ஒன்றரை வயது பெண் குழந்தை எட்டிப்பார்த்துள்ளது. தரையிலிருந்து இரண்டடி உயரத்தில் உள்ள அந்தக் கிணறு தகரத்தால் மூடி வைக்கப்பட்டிருந்தது. அந்தத் தகரத்தின் மீது குழந்தை ஏற முயன்றபோது உள்ளே விழுந்தது. அதைப்பார்த்த கிருபாவதி அதிர்ச்சியில் உறைந்தார். எதையும் யோசிக்காமல் அடுத்த சில நொடிகளில் துணிச்சலுடன் கிணற்றுக்குள் குதித்தார். 

கிணறுக்குள் குதித்த கிருபாவதி அந்தக் கும்மிருட்டிலும் ஒன்றரை வயது பேத்தியைக் கண்டுபிடித்து தூக்கினார். நல்லவேளை, கிணற்றில் 5 அடி மட்டுமே தண்ணீர் இருந்தது. இதனால் பேத்தியை தூக்கி வைத்துக் கொண்ட கிருபாவதி, `காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்' எனச் சத்தம்போட்டார். கிணற்றுக்குள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கிருபாவதியையும் அவரின் பேத்தியையும் பார்த்து, `தைரியமாக இருங்கள். எப்படியும் உங்களை காப்பாற்றிவிடுவோம்' என்று பொதுமக்கள் கூறினர். கிணற்றுக்குள் இருட்டாக இருந்ததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் செல்போன் மற்றும் மின்விளக்கு மூலம் வெளிச்சத்தை ஏற்படுத்தினர். 

 கிணற்றுக்குள் விழுந்த பேத்தியை காப்பாற்றிய பாட்டி

இதையடுத்து பொதுமக்கள் குழந்தையை கிணற்றிலிருந்து எப்படி வெளியில் கொண்டு வரலாம் என்று யோசித்தனர். உடனடியாக நீளமான கயிறும் பெரிய வாளி ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தார் ஒருவர். அவர் வாளியைக் கயிற்றில் கட்டி கிணற்றுக்குள் இறக்கினார். உள்ளே இருந்த கிருபாவதி, வாளிக்குள் பேத்தியை வைத்தார். வெளியிலிருந்தவர்கள் குழந்தையை மீட்டனர். அதன்பிறகுதான் கிருபாவதி நிம்மதி பெருமூச்சுவிட்டார். கிணற்றுக்குள் மோட்டார் மற்றும் குழாய்கள் இருந்துள்ளன. ஆனால் அதன் மீது குழந்தை மோதாமல் தண்ணீரில் விழுந்ததால் எந்தவிதக் காயமும் இல்லை. ஆனால் கிணற்றில் 5 அடி ஆழம் மட்டுமே தண்ணீர் இருந்ததால் கிருபாவதியின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. 

 இதையடுத்து கிருபாவதியை மீட்க முயற்சி நடந்தது. குழந்தை வெளியில் வந்தபிறகுதான் கிருபாவதி தன்னுடைய இடது காலில் வலி அதிகமாக இருப்பதை உணர்ந்தார். வலியின் வேதனையால் அவரால் கிணற்றிலிருந்து வெளியில் வரமுடியவில்லை. தொடர்ந்து பூந்தமல்லி தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு அலுவலர் இளங்கோவன் தலைமையில் வீரர்கள் ஏ.சுபாஷ், எஸ்.சுபாஷ், சரவணன், டிரைவர் அருள்ஜோதி ஆகியோர் கொண்ட டீம் இரவு 8.30 மணியளவில் சம்பவ இடத்துக்குச் சென்றனர். பெரிய டார்ச் லைட்டை கிணற்றுக்குள் தீயணைப்பு வீரர்கள் அடித்து வெளிச்சத்தை ஏற்படுத்தினர். அடுத்து, தீயணைப்பு வீரர் ஏ.சுபாஷ் ராட்சத கயிறு மூலம் கிணற்றுக்குள் பாதுகாப்பாக இறங்கினார். இதையடுத்து அந்தக் கயிற்றில் கிருபாவதியை அமர வைத்தார் ஏ.சுபாஷ். 

கிணற்றுக்கு மேலே இருந்த தீயணைப்பு வீரர்கள் கிருபாவதியை பத்திரமாக வெளியில் கொண்டு வந்தனர். அதற்குள் 108 ஆம்புலன்ஸிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தயார்நிலையில் ஊழியர்கள் அங்கு காத்திருந்தனர். கிருபாவதிக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அப்போதுதான் அவரின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. வெளியில் வந்த கிருபாவதி, வலியை மறந்து, என் பேத்தி எங்கே, எப்படி இருக்கிறாள்' என்று விசாரித்தார். இதையடுத்து சிகிச்சைக்காக கிருபாவதி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

குழந்தை விழுந்த கிணறு

கிருபாவதி மட்டும் புத்திச்சாலித்தனமாகச் செயல்படவில்லை என்றால் நிச்சயம் குழந்தை தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கும் என்று தீயணைப்பு வீரர்கள் கூறினர். கிருபாவதியை எப்படிக் காப்பாற்றினீர்கள் என்று தீயணைப்பு அலுவலர் இளங்கோவனிடம் கேட்டதற்கு, ``எங்களுக்கு இரவு 8.15 மணியளவில் தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு 8.30 மணிக்குச் சென்றோம். அங்கு பொதுமக்களே புத்திசாலித்தனமாக வாளி மூலம் குழந்தையை வெளியில் கொண்டு வந்திருந்தனர். கிருபாவதியும் குழந்தையும் விழுந்த கிணற்றின் ஆழம் 45 அடி, அகலம் மூன்றரை அடி. உறை கிணறு என்பதால் கிணற்றுக்குள் போதிய ஆக்சிஜன் கிடைக்காது. அதனால் முதலில் கிருபாவதிக்கு சில அறிவுரைகளை மேலே இருந்தபடி கூறினோம். குறுகிய இடம் என்பதால் தீயணைப்பு வீரர் ஏ.சுபாஷ் மட்டும் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கினார். எங்களிடம் உள்ள கயிற்றை சேர் போல மாற்றி கிருபாவதியை கிணற்றிலிருந்து மீட்டோம். அரை மணி நேரத்தில் மீட்புப் பணி முடிந்தது''என்றார். 

இந்தச் சம்பவத்தையடுத்து பூந்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரி தலைமையில் போலீஸார் அங்கு சென்று விசாரித்தனர். எப்படி குழந்தை விழுந்தது என்று கிருபாவதியிடம் போலீஸார் கேட்டனர். அதற்கு அவர், வீட்டில் கரன்ட் இல்லை. அதைச் சரிசெய்து  கொண்டிருந்தனர். அப்போதுதான் குழந்தை கிணற்றுக்குள் விழுந்துவிட்டது என்று கூறியுள்ளார். இதையடுத்து கிணற்றை பத்திரமாக மூடி வையுங்கள் என்று போலீஸார் அறிவுரை கூறி விட்டுச் சென்றனர். 

ஒன்றரை வயது பேத்திக்காக தன்னுடைய உயிரைக்கூட மதிக்காத சூப்பர் பாட்டி கிருபாவதியை அந்தப் பகுதியினரும் தீயணைப்பு வீரர்களும் பாராட்டியுள்ளனர். 

 பாசத்துக்கும் துணிச்சலுக்கும் பெயர்போன சூப்பர் பாட்டி ஆசிரியை கிருபாவதிக்கு ராயல் சல்யூட்