ஆதரவாளர்கள் வீடுகளில் ரூ.2.10 கோடி பறிமுதல்! - ஐ.டி ரெய்டால் கிலியில் தம்பிதுரை? | 2 crore and ten lakhs recovery in thambidurai friend's circle - Karur sensation!

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (12/04/2019)

கடைசி தொடர்பு:15:20 (12/04/2019)

ஆதரவாளர்கள் வீடுகளில் ரூ.2.10 கோடி பறிமுதல்! - ஐ.டி ரெய்டால் கிலியில் தம்பிதுரை?

திருச்சி மற்றும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர்களின் வீடு மற்றும் தொழில்கூடங்களில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில், இரண்டு கோடியே 10 லட்சம் ரூபாயைக்  கைப்பற்றியதாகத் தெரிகிறது. 'வாக்காளர்களுக்கு கொடுக்க தம்பிதுரை தரப்பு கொடுத்திருந்த பணம்தான் இது' என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதால், கரூர் தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தம்பிதுரை

தமிழகத்தில், வரும் 18-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக, அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் அனல் பறக்கும் பிரசாரத்தில் குதித்திருக்கிறார்கள். பல தொகுதிகளில் பணப்பட்டுவாடா ஜோராக நடைபெற்றுவருவதாக சொல்லப்படுகிறது.  சமீபத்தில், வேலூர் மாவட்டத்தில் துரைமுருகனுக்கு நெருக்கமானவரின் சிமென்ட் குடோனில் இருந்து, 11 கோடியே 53 லட்சத்தைக் கைப்பற்றினர். 'அவரது மகன் கதிர் ஆனந்த் சார்பில் வாக்காளர்களுக்குக் கொடுக்க வைக்கப்பட்டிருந்த பணம் அது' என்று சொல்கிறார்கள். ஆனால், துரைமுருகன் தரப்பு மறுத்துவருகிறது. இருந்தாலும், அங்கே பேங்க் லாக்கர் ஆய்வு, பேங்க் மேலாளரிடம் விசாரணை என்று அதிகாரிகள் அந்த விவகாரத்தை தோண்டித் துருவிவருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று 'தம்பிதுரை வீட்டில் வருமான வரித் துறை ரெய்டு' என்று ஒரு தகவல் செய்தியாளர்களுக்குக் கிடைத்தது. உடனே அரக்கபறக்க செய்தியாளர்கள் தம்பிதுரை வீட்டிற்கு விரைந்தனர். ஆனால், அங்கே வருமான வரித் துறை எதுவும் நடக்கவில்லை. அதன்பிறகுதான் தெரிந்தது. தம்பிதுரைக்கு நெருக்கமான கரூர் ராமலிங்கம்புரத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரது டெக்ஸ்டைல்ஸிலும், ராமஜெயம் நகரில் உள்ள நாட்றாயன் என்பவருக்குச் சொந்தமான இடத்திலும் வருமான வரித் துறை ரெய்டு நடத்தினர் என்பது. இதில், செல்வத்துக்குச் சொந்தமான இடத்தில் 75 லட்சம் ரூபாயும், நாட்றாயனின் இடத்தில் 85 லட்சம் ரூபாயும் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அதேபோல, திருச்சி மாவட்டம், வையம்பட்டி அ.தி.மு.க சென்றியச் செயலாளரான சேது என்பவர் வீட்டில் 50 லட்சத்தை இன்னொரு டீம் கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது. முதல்கட்ட விசாரணையில், 'இந்த  2 கோடியே,  10 லட்ச ரூபாயும் தம்பிதுரை தரப்பு வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பதுக்கிவைத்திருந்த பணம்' என்று தெரிய வருவதாக வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்பிதுரை

இந்நிலையில், நம்மிடம் பேசிய சிலர், "கரூர் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிடுபவர் தம்பிதுரை. இவருக்கு தொகுதியில் கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது. எதிர்தரப்பு வேட்பாளர் ஜோதிமணியிடம் தான் தோற்றுவிடுவோமோ என்கிற பயம் அவரை வாட்ட ஆரம்பிச்சிருக்கு. 'லோக்சபா துணை சபாநாயகராக இருந்த தான், இந்தத் தேர்தலில் எப்படியும் ஜெயிக்க வேண்டும்' என முயற்சி மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, வாக்காளர்களுக்கு மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு என 100 கோடி ரூபாய் வரை பணம் செலவழிக்க முடிவுசெய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தற்போதே லட்சக்கணக்கிலான பணம் தண்ணீராகச் செலவழிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், கரூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட மணப்பாறை அருகேயுள்ள வையம்பட்டி அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் சேதுவின் வீடுகளில் இன்று வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 50 லட்ச ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.

மேலும், கரூரில் என்.எஸ்.என். கல்லூரி அதிபர் செல்வத்தின் வீடு மற்றும் அலுவலகங்கள் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், 6 கோடி ரூபாய் வரை பணம் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால்,  2 கோடியே 10 லட்சம்தான் கைப்பற்றப்பட்டது என வருமான வரித் துறை தரப்பில் சொல்லப்படுது. எது எப்படியோ, வருமான வரித் துறையினரின் இந்தத் திடீர் சோதனை, தம்பிதுரை தரப்பினருக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது என்பது மட்டும் உண்மை" என்றார்கள்.

இந்த வருமான வரித் துறை ரெய்டு சம்பந்தமாக தம்பிதுரை தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் தரப்படவில்லை.