`நாளை காலை வருகிறோம்!'- சொன்னபடியே ஐ.டி அதிகாரிகள் வந்ததால் பதறிய போட்டோ ஸ்டூடியோ ஊழியர்கள் | IT Raid in Coimbatore photo studio

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (12/04/2019)

கடைசி தொடர்பு:15:40 (12/04/2019)

`நாளை காலை வருகிறோம்!'- சொன்னபடியே ஐ.டி அதிகாரிகள் வந்ததால் பதறிய போட்டோ ஸ்டூடியோ ஊழியர்கள்

கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக வந்த புகாரையடுத்து, கோவையில் ஸ்டூடியோ ஒன்றில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

போட்டோ ஸ்டூடியோவில் ஐடி அதிகாரிகள்

கோவை திருச்சி சாலையில், சுங்கம் பகுதி அருகே "Zero Gravity Photography" என்ற ஸ்டூடியோ உள்ளது.   இந்த ஸ்டூடியோவுக்கு  நேற்று மாலை வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடந்த வந்தனர். ஆனால், அந்த நேரத்தில் ஸ்டூடியோவின் ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். ஸ்டூடியோவின் உரிமையாளர் அஜய் தாமஸ் வெளியூரில் இருந்தார். இதனால், "நாளை காலை வருகிறோம்" என்று சொல்லிவிட்டு அதிகாரிகள் சென்றதால் ஊழியர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். நேற்று மாலை முதலே ஸ்டூடியோவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று வழக்கம்போல ஸ்டூடியோ ஊழியர்கள் பணிக்கு வந்தனர். சரியாக காலை 11 மணிக்கு வருமான வரித் துறை அதிகாரிகளும், பறக்கும் படை அதிகாரிகளும் ஸ்டூடியோவுக்கு வந்தனர். ஸ்டூடியோ ஊழியர்கள் வெளியில் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக வந்த புகாரையடுத்து, சோதனை நடந்துவருகிறது. தேர்தல் நேரம் என்பதால், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக, பணம் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதா என்ற அடிப்படையிலும் சோதனை நடந்துவருகிறது. இதனிடையே, ஸ்டூடியோ உரிமையாளரின் வழக்கறிஞர்கள் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதால், அங்கு பாதுகாப்புக்காக துணை ராணுவத்தினர் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.