‘சர்கார்' பட பேனரை கிழித்தவர்களுக்கு எங்கள் ஓட்டு கிடையாது!' - விஜய் மக்கள் இயக்கம் | Vijay fans association supports DMK candidate in Vellore

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (12/04/2019)

கடைசி தொடர்பு:16:10 (12/04/2019)

‘சர்கார்' பட பேனரை கிழித்தவர்களுக்கு எங்கள் ஓட்டு கிடையாது!' - விஜய் மக்கள் இயக்கம்

அரக்கோணம் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் திடீரென ஆதரவு கொடுத்துள்ளனர். இதற்குப் பின்னணியில், ஒரு குறிப்பிட்ட தொகை கைமாறியதால், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் விலைபோனதாக  அ.தி.மு.க கூட்டணிக் கட்சியினர் விமர்சிக்கின்றனர்.

ஜெகத்ரட்சகன்

அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில், தி.மு.க சார்பில் ஜெகத்ரட்சகன், அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க சார்பில் ஏ.கே.மூர்த்தி களமிறங்கியிருக்கிறார்கள். இருவரும் ‘காஸ்ட்லி’ வேட்பாளர்கள் என்பதால், நட்சத்திரத் தொகுதியாக அரக்கோணம் ஜொலிக்கிறது. ஏ.கே.மூர்த்தி செலவுசெய்வதில் ‘கஞ்சத்தனம்’ செய்கிறார். ஜெகத்ரட்சகன் யோசிக்காமல் பணத்தை இரைத்துவருகிறார். எதிரணி நிர்வாகிகள் சிலரை மறைமுகமாக வளைத்துபோட்டுள்ள ஜெகத்ரட்சகன், அவர்களைவைத்தே அ.தி.மு.க கூட்டணியில் உள்ளடி வேலைகளைச் செய்வதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிலரும் ஜெகத்ரட்சகன் வீசிய வலையில் விழுந்துள்ளனர். 

‘‘கரன்சி வேட்பாளர் ஜெகத்ரட்சகனிடம், ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டு, தி.மு.க-வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் எடுத்திருப்பதாக, ’’அ.தி.மு.க கூட்டணிக் கட்சியினர் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இதுதொடர்பாக, வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் வேல்முருகனிடம் பேசினோம். ‘‘தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகன் மற்றும் ராணிப்பேட்டை எம்.எல்.ஏ  ஆர்.காந்தி இருவரும் எங்கள் அலுவலகத்துக்கு நேரில் வந்து ஆதரவு கேட்டனர். நாங்களும் மரியாதை நிமித்தமாக ஆதரவு தருவதாகக் கூறினோம். அதில் உள்நோக்கம் ஏதுமில்லை. ஆனால், `சர்கார்' படப் பேனரை கிழித்தவர்களுக்கு உண்மையான விஜய் ரசிகர்கள் ஓட்டு போட மாட்டார்கள்’’ என்றார் காட்டமாக.