`பா.ஜ.க-வுக்கு ஆதரவானது இல்லை; ரஜினி சொன்னது பொதுவான கருத்து!' - கொங்கு ஈஸ்வரன் | Rajinikanth did not support BJP says, kmdk eswaran

வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (12/04/2019)

கடைசி தொடர்பு:17:25 (12/04/2019)

`பா.ஜ.க-வுக்கு ஆதரவானது இல்லை; ரஜினி சொன்னது பொதுவான கருத்து!' - கொங்கு ஈஸ்வரன்

நாமக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர், இப்போதே வாய்திறந்து பேசுவதில்லை. இங்கு வாய்திறந்து பேச முடியாதவர், எப்படி நாடாளுமன்றம் சென்று மக்கள் பிரச்னையைப் பேசுவார்'' என்று அ.தி.மு.க வேட்பாளரை  விமர்சித்துள்ளார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன்.

ஈஸ்வரன்

நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைமை தேர்தல் அலுவலகத்தில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'தொகுதி முழுவதும் தண்ணீர்ப் பஞ்சம் அதிக அளவில் உள்ளது.  உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் இருந்ததே இதற்குக் காரணம். அ.தி.மு.க, கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தாதது  மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி மாற்றத்தை  மக்கள் துடிப்புடன், ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர் என்பதை பிரசாரத்தின் வாயிலாகத் தெரியவந்துள்ளது. லாபம் இல்லாமல் தொழிலாளர்கள், வேலை இல்லாமல் இளைஞர்கள்,  கேஸ் விலை உயர்வால் பெண்கள், கேபிள் கட்டணம் உயர்வால்  பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தத் தயாராக உள்ளனர். 

பா.ஜ.க-வினர், தங்களைத்  தாங்களாகவே வலிமையானதாகவும், பாதுகாப்பானதாக உள்ளதாகவும் பிரசாரம் செய்துவருகின்றனர். பிரதமர் வேட்பாளர் மோடி ஆதரவுபெற்ற அ.தி.மு.க-வினர், மத்திய அரசை மறைத்து பிரசாரம் செய்துவருகின்றனர் . பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் நாட்டின் பாதுகாப்பை மட்டும் கூறியுள்ளது.  இதை மக்கள்  ஏளனமாகப் பார்க்கின்றனர். ஏதோ எல்லையில் பல்வேறு நாடுகள் இந்தியாவின் மீது தாக்குதல் செய்வதாகவும், பிரதமர் மோடி எல்லையில்  துப்பாக்கி வைத்து தாக்கத் தயாராக இருப்பதுபோலும் ஒரு தோற்றத்தை  ஏற்படுத்திவருகின்றனர் பா.ஜ.க-வினர். இதனால், மக்கள் பா.ஜ.க மீதும் அ.தி.மு.க மீதும் எதிர்ப்பாக உள்ளனர். நாமக்கல்  நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடும் சின்ராஜ், 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.

எதிர்க்கட்சிகள், தி.மு.க கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறிவருகின்றனர். காங்கிரஸ் கட்சி, கடந்த 50 ஆண்டுகளில் வளர்ச்சித் திட்டம் ஏதும் செய்யவில்லையா.  பா.ஜ.க-வினர் மட்டும் ஏதோ செய்ததுபோல ஒரு பிம்பத்தை ஏற்படுத்திவருகின்றனர்.  நதிநீர் இணைப்பை வரவேற்பதாக  ரஜினி கூறியுள்ளார். இது, பொதுவான கருத்து. இது, பா.ஜ.க-விற்கு ஆதரவானது இல்லை. இதுகுறித்து ரஜினியே அனைவருக்கும் பொதுவான கருத்து  என்று கூறியுள்ளார். பா.ஜ.க, அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க ஆகிய கட்சிக்குள் முரண்பாடுகள் அதிக அளவில் உள்ளன. இந்தக் கூட்டணி சந்தர்ப்பவாத வியாபாரக் கூட்டணி. நாமக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர், இப்போதே  வாய்திறந்து பேசுவதில்லை. இங்கு வாய்திறந்து பேச முடியாதவர், எப்படி நாடாளுமன்றத்தில் சென்று மக்கள் பிரச்னையை பேசுவார்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க