அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்கும் வாக்கு சேகரித்த ஜோதிமணி! - கரூர் பரபரப்பு | Jothimani who collected votes along the Aravakkurichi interim election! - Karur sensation!

வெளியிடப்பட்ட நேரம்: 18:12 (12/04/2019)

கடைசி தொடர்பு:18:12 (12/04/2019)

அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்கும் வாக்கு சேகரித்த ஜோதிமணி! - கரூர் பரபரப்பு

அரவக்குறிச்சி தொகுதிக்கு, தி.மு.க கூட்டணி வேட்பாளர் யாரென்று இன்னும் அந்தக் கூட்டணி சார்பில் அறிவிக்கப்படாத நிலையில், ஜோதிமணி வாக்குகள் கேட்டதற்குப் பின்னே, 'செந்தில் பாலாஜி மீதான அவரது பாசம்தான் காரணம்' என்று சொல்கிறார்கள். 

அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்கும் வாக்கு சேகரித்த ஜோதிமணி! - கரூர் பரபரப்பு

ரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக இருக்கும் ஜோதிமணி, அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குகள் சேகரித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், அரவக்குறிச்சி தொகுதிக்கு, தி.மு.க கூட்டணி வேட்பாளர் யாரென்று இன்னும் அந்தக் கூட்டணி சார்பில் அறிவிக்கப்படாத நிலையில், ஜோதிமணி வாக்குகள் கேட்டதற்குப் பின்னே, 'செந்தில் பாலாஜி மீதான அவரது பாசம்தான் காரணம்' என்று சொல்கிறார்கள். 

 ஜோதிமணி

தமிழகத்தில் வரும் 18-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுவை மாநிலம் உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலும், காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அன்று நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இன்னும் மீதமுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால், அந்தத் தொகுதிகளுக்குரிய தேர்தல் தேதி முதலில் அறிவிக்கப்படவில்லை. ஆனால், கடந்த 9-ம் தேதி, 'காலியாகவுள்ள அந்த நான்கு தொகுதிகளான அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும் மே 19-ம் தேதி நடைபெறும்' என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 'அடுத்த மாதம் 23-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை நாளன்றே, இந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக, 'வரும் 22-ம் தேதியிலிருந்து வேட்புமனுத் தாக்கல் செய்யலாம்' என்று அறிவிப்பு வெளியானது. நான்கு தொகுதிகளுக்கும் இன்னும் எந்தக் கட்சியும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. ஆனால், அதற்குள் கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான ஜோதிமணி, அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குகள் கேட்ட விவகாரம் பரபரப்புக்கு வித்திட்டிருக்கிறது. 

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, கரூர் பரமத்தி ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளப்பட்டி, பழமாபுரம், புன்னம்சத்திரம், குப்பம், க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கரூர் புன்னம்சத்திரம் கடைவீதியில் சாலையில் இறங்கி வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு கேட்டார். பெண்களிடையே காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு பெருகி வருவதால், தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த நிர்வாகிகள் உற்சாகமாகத் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஜோதிமணி, "நடைபெற உள்ள தேர்தலில் அ.தி.மு.க-வினரின் வீட்டுக்குச் சென்று கை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு, வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும்" என்று காங்கிரஸ் மற்றும் தி.மு.க தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து பேசிய ஜோதிமணி, "வரும் 18-ம் தேதிக்குப் பிறகு வாக்குப்பதிவு முடிந்ததும், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கும் வாக்கு சேகரிக்க இங்கே மீண்டும் வருகை தர உள்ளோம். அந்தத் தேர்தலிலும் எங்கள் கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும். ஏனெனில், இந்தத் தொகுதிக்கு நல்ல நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினரும் வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால், பஞ்சாயத்துத் தலைவர் இல்லை, கவுன்சிலர் இல்லை. ஏறக்குறைய அரவக்குறிச்சி தொகுதி ஓர் அநாதை தொகுதிபோல உள்ளது. இந்தப் பிரச்னைக்கு நாம் உடனடியாக முடிவுகட்ட வேண்டும். இந்தத் தொகுதியை வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது. அதனால், கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக என்னைத் தேர்வு செய்யும் நீங்கள், கட்டாயம் அரவக்குறிச்சி சட்டமன்றத் இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணி சார்பில் நிற்கும் வேட்பாளரையும் அமோக வெற்றியடையச் செய்ய வேண்டும்" என்றார்.

செந்தில்பாலாஜி

அப்போது, அங்கே குழுமி இருந்த தி.மு.க-வினர், "செந்தில்பாலாஜிதான் வேட்பாளர்" என்று சத்தமாகத் தெரிவித்தனர். இதற்கிடையில், நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், "அரவக்குறிச்சிக்கு, இப்போதைக்கு இடைத்தேர்தல் வராது என்றே நினைத்தோம். ஆனால், தேர்தல் ஆணையம் அடுத்த மாதம்19-ம் தேதியே அரவக்குறிச்சி உள்ளிட்ட நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துவிட்டது. இதனால், எங்களுக்கு உற்சாகமாக உள்ளது. குறிப்பாக, தி.மு.க மாவட்டப் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜிக்கு மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. அரவக்குறிச்சி இடைத்தேர்தலைப் பொறுத்தமட்டில், அது தேதி அறிவிக்கப்படாததற்கு முன்பே, அந்தத் தொகுதிக்கு வேட்பாளர் செந்தில்பாலாஜிதான் என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. கடந்த 5-ம் தேதி ஜோதிமணிக்கு வாக்குகள் கேட்க தி.மு.க தலைவர் ஸ்டாலினை அழைத்துவந்து கரூரில் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தை நடத்தினார் செந்தில்பாலாஜி. 

40.000-க்கும் அதிமானவர்களைத் திரட்டி, ஸ்டாலினைப் பிரமிக்கவைத்தார். அந்தக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலினும், 'நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் விரைவில் நடக்கும். அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளராக செந்தில்பாலாஜி அமோகமாக வெற்றிபெறுவார்' என்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே வேட்பாளரை அறிவித்தார் ஸ்டாலின். அதேபோல், ஜோதிமணி காங்கிரஸ் வேட்பாளர் என்றாலும், அவரது வெற்றிக்காகக் கடுமையாக உழைத்துவருகிறார் செந்தில்பாலாஜி. கைகாசை எக்கச்சக்கமாகச் செலவும் செய்கிறார். அதைப் பார்த்து உற்சாகமான ஜோதிமணி, தனக்காக உழைக்கும் செந்தில்பாலாஜிக்குக் கைம்மாறு செய்யவே, வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குகள் சேகரித்தார். அதேநேரம், இப்போதே அரவக்குறிச்சி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், செலவும் கம்மியாகும் என்று செந்தில்பாலாஜி குதூகலமாகி இருக்கிறார்" என்றார்கள்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்...
 


டிரெண்டிங் @ விகடன்