`பெண்ணின் நகத்திலிருந்த புதுமாப்பிள்ளையின் ரத்தம்!'- திருத்தணி இரட்டைக் கொலையில் துப்புதுலங்கியது  | Tiruvallur district Police arrests man in tiruttani double murder

வெளியிடப்பட்ட நேரம்: 17:07 (12/04/2019)

கடைசி தொடர்பு:17:45 (12/04/2019)

`பெண்ணின் நகத்திலிருந்த புதுமாப்பிள்ளையின் ரத்தம்!'- திருத்தணி இரட்டைக் கொலையில் துப்புதுலங்கியது 

திருத்தணியில் தனியாக இருந்த விஜி மற்றும் அவரின் மகன் கொலை வழக்கில் அதிரடித் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட விஜி,  கொலை செய்தவருடன் கடுமையாகப் போராடியுள்ளார். அப்போது, அவரின் நகத்தில் கொலை செய்தவரின் ரத்தமும் தோலும்  ஒட்டியுள்ளன. அதை வைத்துதான் இந்த வழக்கில் துப்பு துலங்கியதாக போலீஸார் தெரிவித்தனர். 

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகில் உள்ள பெருமாள் தாங்கல் புதூர் பாலாஜி நகரில் குடியிருப்பவர், வனபெருமாள். காவலாளி. இவரின் மனைவி, விஜி என்கிற விஜயலட்சுமி (40). இவர்களின் மகன், போத்திராஜ் (10). கடந்த 8-ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த விஜியும் போத்திராஜும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் திருத்தணி போலீஸார் விசாரணை நடத்தினர். 

சம்பவம்  நடந்த வீட்டின் அருகில் தனியார் டயர் கம்பெனி ஒன்று உள்ளது. கம்பெனிக்கு வரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களின் கைவரிசையாக இருக்கலாம் என போலீஸார் முதலில் சந்தேகித்தனர். ஆனால், போலீஸாருக்கு சம்பவம்  நடந்த இடத்தில் முக்கிய தடயம் ஒன்று சிக்கியது. அதைக்கொண்டு, புதுமாப்பிள்ளை வெங்கட் என்பவரை போலீஸார் பிடித்துள்ளனர். அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

கொலை செய்யப்பட்ட போத்திராஜ்  

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட பெண்ணின் நகத்தில் ரத்தம், தோல் இருந்தன. அந்த ரத்தத்தை ஆய்வு செய்தபோது, அது பெண்ணின் ரத்தம் இல்லை என்பது தெரியவந்தது. இதனால், பெண்ணைக் கொலை செய்யும்போது கொலையாளியுடன் அவர் போராடியிருக்க வேண்டும் என்று கருதினோம்.  அந்த ரத்தம், கொலை செய்தவரின் ரத்தம் என்பதை உறுதிப்படுத்தினோம். 

 கைதான வெங்கட் இதையடுத்துதான், கொலை நடந்த வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினோம். அப்போது, வீட்டின் அருகில் வசிக்கும் வெங்கட் என்பவர்மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரின் ரத்தம் என்ன குரூப் என்பதை ரகசியமாக விசாரித்தோம். அப்போதுதான் கொலை செய்யப்பட்ட பெண்ணின் நகத்திலிருந்த ரத்தமும் வெங்கட்டின் ரத்தமும் ஒன்று என்பது பரிசோதனையில் தெரியவந்தது. மேலும், வெங்கட்டின் கழுத்துக்குக் கீழ் நகக்கீறல்கள் உள்ளன. தொடர்ந்து வெங்கட்டைப்பிடித்து விசாரித்தோம். அப்போது, அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள தகவல் தெரியவந்தது. திருமணச் செலவுக்காகத்தான் அவர் இப்படிச்  செய்ததும் தெரிந்தது. 
 
வெங்கட், பால் வியாபாரம் செய்துவருகிறார்.  விஜியின் கணவர் வனபெருமாள், வசதியாக வாழ்வதைப் பார்த்த வெங்கட், அங்கு கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளார். அதற்காக நோட்டமிட்டுவந்த சமயத்தில், வனபெருமாள் கடந்த 7-ம் தேதி இரவு பணிக்குச் சென்றுவிட்டார். வீட்டில் விஜியும் போத்திராஜிம் தனியாக இருந்துள்ளனர்.  அதனால், 7-ம் தேதி இரவே வனபெருமாளின் வீட்டின் மாடியில் யாருக்கும் தெரியாமல் வெங்கட் படுத்துக்கொண்டார். அதிகாலையில் விஜி, கோலம்போட வெளியில் வரும்போது நகை, பணத்தைக் கொள்ளையடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். அதன்படி 8-ம் தேதி அதிகாலையில், விஜி கோலம் போடுவதற்காக வெளியில் வந்தார். வீட்டுக்குள் மின்விளக்கு எரிந்துகொண்டிருந்தது.

  கொலை நடந்த வீடு

வீட்டுக்குள் நுழைந்த வெங்கட், பீரோவைத் திறந்து நகை, பணத்தைக் கொள்ளையடித்துள்ளார். வீட்டிலிருந்து சத்தம் வருவதைக் கேட்ட விஜி, வீட்டுக்குள் நுழைந்தபோது, பயத்தில் மின்விளக்கை அணைத்த வெங்கட், கதவின் பின்பக்கத்தில் மறைந்து நின்றுள்ளார். திடீரென மின்விளக்கு அணைவதைக் கண்ட விஜி, அதிர்ச்சியடைந்துள்ளார். வீட்டின் கதவுக்குப் பின்னால் முகமுடி அணிந்தபடி வெங்கட் நின்றுகொண்டிருப்பதை விஜி பார்த்துவிட்டு சத்தம் போட்டுள்ளார்.

உடனே இரும்பு ராடால் விஜியின் தலையில் அடித்த வெங்கட், அவர் அணிந்திருந்த தாலிச்செயினைப் பறித்துள்ளார். விஜியின் சத்தம் கேட்டு வந்த போத்திராஜ், ரத்த வெள்ளத்தில் அம்மா உயிருக்குப் போராடுவதைப் பார்த்துள்ளார். உடனடியாக செல்போனில் அப்பாவுக்கு தகவல் தெரிவிக்க முயன்றுள்ளார். அதைத்தடுத்த வெங்கட், கழுத்தை நெரித்து போத்திராஜை கொலை செய்துள்ளார். 

அதன்பிறகு, வீட்டிலிருந்து நகை, பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். திருடிய நகைகளை நண்பர்களிடம் கொடுத்துவைத்துள்ளார். வெங்கட் மட்டும்தான் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் கொள்ளையடித்த நகை, பணத்தை பறிமுதல்செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றார். 

 கொலை செய்யப்பட்ட விஜி

இதற்கிடையில், வெங்கட் கொள்ளையடித்த நகை, பணம் ஆகியவற்றை மீட்பதில் திருத்தணி சரக காவல் உயரதிகாரி ஒருவர் பேரம் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வெங்கட்டின் நண்பர்களான கட்சிப் பிரமுகர் உட்பட சிலரை விடுவிக்க அந்த போலீஸ் உயரதிகாரி கணிசமான தொகையைக் கையூட்டாகப் பெற்றதாக மாவட்ட எஸ்.பி அலுவலகத்துக்கு தகவல் சென்றுள்ளது. அதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. 

இந்த வழக்கை சிறப்பாக துப்புதுலக்கிய தனிப்படை போலீஸாருக்கு, பல வகையில் பிரஷர் வந்துள்ளது. அதையெல்லாம் சமாளித்து இரட்டைக் கொலை வழக்கை தனிப்படை போலீஸார் விசாரித்துள்ளனர். குறிப்பாக, விஜியின் நகத்திலிருந்த வெங்கட்டின் ரத்தத் துளிகள், தோல்தான் துப்புதுலங்க முக்கிய ஆதாரமாக இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.