`நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் மோசடி! - பெ.மணியரசன் புகார் | P Maniyarasan slams EC over symbol allocation for Naam Tamilar Katchi

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (12/04/2019)

கடைசி தொடர்பு:18:40 (12/04/2019)

`நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் மோசடி! - பெ.மணியரசன் புகார்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் மோசடியாக நடந்துள்ளதாக, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

பெ.மணியரசன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய பெ.மணியரசன், ‘’தேர்தல் ஆணையம் என்பது அரசமைப்புச் சட்டப்படி தன்னாட்சிபெற்ற அமைப்பாகும். ஆனால், அது ஆளும் பா.ஜ.க-வின் கைத்தடியாகவே செயல்படுகிறது. இந்தியத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் திரிபு வேலைகளில் ஈடுபடுகிறது. தமிழ்நாட்டில் பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணியின் குற்றேவல் புரியும் அமைப்பாக அது குறுகிப்போயுள்ளது. தேர்தல் சின்னம் ஒதுக்குவதில் நாம் தமிழர் கட்சிக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் வேண்டுமென்றே திரிபு வேலைகள் செய்தது. அ.ம.மு.க-விற்கு சின்னம் ஒதுக்குவதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்தது. உச்ச நீதிமன்றத்தின் ஆணையால்தான் கடைசி நேரத்தில் ஒரே வகைத் தேர்தல் சின்னம் ஒதுக்கியது. இப்போது, கணிப்பொறியில் செய்யப்பட்டுள்ள தேர்தல் சின்னங்களில், நாம் தமிழர் கட்சியின் கரும்பு உழவர் சின்னம் கண்ணுக்குத் தெரியாத அளவில் வேண்டுமென்றே மங்கலாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அச்சின்னத்தை வாக்காளர்கள் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

அ.ம.மு.க வேட்பாளர்களுக்கு அடுத்த சுயேச்சை வேட்பாளரின் சின்னமாக அக்கட்சியின் பழைய குக்கர் சின்னத்தை வழங்கியுள்ளார்கள். எடுத்துக்காட்டாக, திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் எஸ்.காமராஜ். இதற்கு அடுத்த பெயராக உள்ள பி.காமராஜ் சுயேச்சை வேட்பாளர். இவருக்கு குக்கர் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. அ.ம.மு.க. ஆதரவு வாக்காளர்களைக் குழப்ப வேண்டும் என்பதற்காகப் பல தொகுதிகளில் பரிசுப் பெட்டிக்கு அடுத்த சின்னமாக வரும் வகையில் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிகள்.

நாம் தமிழர் கட்சி வடசென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் காளியம்மாள், தங்கள் கட்சிச் சின்னம் மற்ற சின்னங்களைப் போல தெளிவாகத் தெரியும் வகையில் பதிவு செய்ய ஆணையிட வேண்டும் என்று கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். ஆனால், கடைசி நேரம்; கால அவகாசம் இல்லை என்று உயர் நீதிமன்றம் அம்மனுவைத் தள்ளுபடிசெய்தது. இது சரியல்ல! கணிப்பொறி யுகத்தில், அதுவும் மோடியின் 'டிஜிட்டல் இந்தியா'வில், மேற்கண்ட குறையைக் களைந்து, கரும்பு உழவர் சின்னத்தைத் தெளிவாகத் தெரியும்படி பதிவிட அதிக நேரம் தேவைப்படாது. தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைத்தடியாகச் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது” என்று தெரிவித்தார்.