`ஆர்.கே.நகரில் எப்படி ஜெயிச்சீங்கன்னு எங்களுக்குத் தெரியாதா?!' - அ.ம.மு.க-வினரை அலறவிட்ட பெண்கள் | Women oppose AMMK campaign in Aranthangi

வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (12/04/2019)

கடைசி தொடர்பு:19:45 (12/04/2019)

`ஆர்.கே.நகரில் எப்படி ஜெயிச்சீங்கன்னு எங்களுக்குத் தெரியாதா?!' - அ.ம.மு.க-வினரை அலறவிட்ட பெண்கள்

அறந்தாங்கி பகுதியில் அ.ம.மு.க வேட்பாளரை ஆதரித்து அ.ம.மு.க நிர்வாகிகள் வாக்கு சேகரித்தபோது, அக்கட்சியினரை அந்தப் பகுதி பெண்கள் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே காரசாரமாக வாக்குவாதம் நடைபெற்றது. இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் அ.ம.மு.க வேட்பாளராக ஆனந்த் போட்டியிடுகிறார். ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி பகுதியில், வீடு வீடாகச் சென்று அ.ம.மு.க நிர்வாகிகள் பரிசுப் பெட்டகம் சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரி பிரசாரம் செய்தனர். அப்போது, ஒரு வீட்டில் இருந்த பெண்கள், அ.ம.மு.க-விற்கு எதற்கு நாங்கள் ஓட்டுப்போட வேண்டும் என்று கூறி பல்வேறு கேள்விகளால் அ.ம.மு.க நிர்வாகிகளை அலறவிட்டனர். அந்த வீடியோவில், கட்சி நிர்வாகிகள், ' அண்ணன் டி.டி.வி. தினகரனின் ஆதரவு வேட்பாளர் ஆனந்த் இங்கு போட்டியிடுகிறார். அவருக்கு பரிசுப் பெட்டகம் சின்னத்தில் ஓட்டு போடுங்கள்" என்கின்றனர். அதற்கு, ''எதற்காக நாங்கள் பரிசுப் பெட்டகத்திற்கு ஓட்டு போட வேண்டும் என்று ஒரு பெண் கேள்வி எழுப்புகிறார், "புதிதாக மக்களுக்கு சேவை செய்வதற்காக அவர் வந்திருக்கிறார். அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்களேன்" என்று அந்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.

அதற்கு அந்தப் பெண், "தினகரனும் சசிகலா குடும்பமும்தான் அரசியலுக்கு வரவேகூடாதுனு ஏற்கெனவே ஜெயலலிதா சொல்லி இருக்கிறார். ஆனால், ஜெயலலிதா பேரைச் சொல்லி ஏன் இவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்கிறார். அதற்கு நிர்வாகிகள், 'அது எல்லாம் பழைய கதை அம்மா, அவர்கள் தமிழகத்திற்கு என்ன கெடுதல் செய்திருக்கிறார்கள் என்று  அந்த பெண்ணைப் பார்த்து கேட்கின்றனர்.   

"செப்.22 அப்பப்லோ மருத்துவமனையில் அம்மாவுக்கு என்ன நடந்தது? பதில் சொல்லுங்கள் என்று அந்தப் பெண் கேட்க, இருதரப்புக்கும் இடையே காரசாரமாக வாக்குவாதம் நடைபெறுகிறது. தொடர்ந்து அந்தப் பெண்,   ஓ.பி.எஸ் எனக்கு எதுவும் தெரியாது என்றார். சசிகலா மேடம் ஆலோசனையின் பேரில்தான் எல்லாம் மருத்துவமனையில் நடந்தது என்று அனைவரும் கூறினார்கள். அங்கு அப்படி என்ன நடந்தது. நிர்வாகிகளோ, அதற்கான விசாரணைதான் நடைபெற்று வருகிறதேம்மா.  நாங்கள் என்ன செய்ய என்று கூற, அதற்கு மற்றொரு பெண் குறுக்கிட்டு, அதெல்லாம் இருக்கட்டும், அங்கு என்ன நடந்ததுனு இதுபோன்ற சந்தர்ப்பத்தில்தான் நாங்கள் உங்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள முடியும்" என்கிறார். அனைத்திற்கும் காரணம் மோடி என்கிறார். வாக்குவாதத்தில் நீண்ட நேரம் பேசாமல் இருந்தார் நிர்வாகி ஒருவர். அதற்கு அந்தப் பெண், "மோடி தான் காரணம் என்றால், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானபோது, மோடிக்கு ஆதரவு கொடுக்கப்போவதாக அறிவித்தீர்களே அது ஏன் என்று  கேட்க,

'நாங்கள் ஆதரவு ஏதும் கொடுக்கவில்லை. அதற்கு ஆதாரம் இருக்கிறதா? நாட்டைக் கெடுக்க வேண்டும் என்றால் மோடிக்கே உங்கள் ஓட்டைப் போடுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகின்றனர். அப்போது, அவர்களை விடாத பெண்கள்,  நாங்கள் ஏன் நாட்டைக் கெடுக்க வேண்டும். ஆர்.கே.நகரில் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாதா? என்று கூற, ஆர்.கே.நகரில் யார் வெற்றிபெற்றது? என்கிறார்கள் அந்த நிர்வாகிகள். ஆமா, ஆமா... 20ரூபாய் டோக்கன் கதை எங்களுக்குத் தெரியும் என்று கூறுகின்றனர். கோபத்துடன் அந்த இடத்தில் இருந்து திரும்பிச்செல்கின்றனர். அ.ம.மு.க நிர்வாகிகளைப் பெண்கள் அலறவிட்ட இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.