79 பதற்றமான வாக்குச்சாவடிகள்; தீவிர கண்காணிப்பில் கேரள எல்லையோரப் பகுதி! -தேர்தலுக்குத் தயாராகும் நீலகிரி | Additional security for maoist threatening polling booths

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (12/04/2019)

கடைசி தொடர்பு:20:30 (12/04/2019)

79 பதற்றமான வாக்குச்சாவடிகள்; தீவிர கண்காணிப்பில் கேரள எல்லையோரப் பகுதி! -தேர்தலுக்குத் தயாராகும் நீலகிரி

.

தமிழகத்தில், 18-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்புப் பணிகளில் தேர்தல் அதிகாரிகள் தீவிரம்காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட  79 பதற்றமான வாக்குச்சாவடிகளில், நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். 49 கமாண்டோ படை போலீஸார் உள்ளனர். இவர்கள், மூன்று முக்கிய பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளார்கள். இதுதவிர, அதிரடிப்படை போலீஸார் 6 இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் . மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ள தமிழக - கேரள மாநில எல்லைகளில் உள்ள பூத்துகளில், கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி, கேமரா,தேர்தல் நுண் பார்வையாளர்களைக்கொண்டு கண்காணிக்கப்பட உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸார், அதிரடிப்படையினர், தமிழக சிறப்புப் பிரிவு போலீஸார், ஆயுதப் படை  போலீஸார் உட்பட 1,350 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது தவிர, மத்திய துணை ராணுவத்தினரும் வரவழைக்கப்பட உள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நபர்கள் என அடையாளம் கண்டுள்ளவர்கள்மீது முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, நீலகிரி மாவட்டத்தில் பழைய குற்றவாளிகள் 287 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

சண்முகப்பிரியா

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா கூறுகையில், ``தேர்தல் சமயங்களில் பழைய குற்றவாளிகளைக் கண்காணிப்பது மட்டுமின்றி, அவர்களால் எவ்வித பிரச்னையும் ஏற்படாமல் இருக்க ஆர்டிஓ மூலம் குற்றவாளிகளிடம் உறுதிமொழி ஆவணம் வாங்குவது வாடிக்கை. மேலும், அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்படுவர். இம்முறை நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் 287 பேரிடம் உறுதிமொழி ஆவணம் பெறப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்.