`அ.தி.மு.க ஆட்சியின்  நாள்கள் எண்ணப்பட்டு வருகிறது' - நாகப்பட்டினத்தில் டி.ராஜா சாடல் | d raja slams modi and admk alliance

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (12/04/2019)

கடைசி தொடர்பு:22:30 (12/04/2019)

`அ.தி.மு.க ஆட்சியின்  நாள்கள் எண்ணப்பட்டு வருகிறது' - நாகப்பட்டினத்தில் டி.ராஜா சாடல்

அதிமுக ஆட்சியின்  நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. விரைவில் அதுவும் முடிவுக்கு வரும் நீடித்து நிற்க இயலாது என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.

டி.ராஜா

நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செல்வராசுவை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா திருவாரூர் வருகை பிரசாரம் செய்தார். அப்போது பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், ``அகில இந்திய அளவில் நாம் பார்க்கும்போது மக்களுடைய எண்ணம் மக்களுடைய அனுபவம் இன்றைக்கு மோடி அரசாங்கத்திற்கு எதிராக மிகவும் தெளிவான முறையில் உருவாகி உள்ளது. மக்கள் பாஜக அரசு மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். எடுத்துக்காட்டாகத் தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க மற்றும் பா.ம.க போன்ற கட்சிகள் பாஜகவுடன் சேர்ந்துகொண்டு தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் துரோகத்தை இழைக்கின்றன. இவர்கள் பாஜகவுடன் சேர்ந்து மாநில நலன் மக்கள் நலன்களுக்குக் குரல் கொடுக்காமல் ஓர் மதவெறி பிடித்த கட்சிகளுக்குப் போயிருக்கிறார்கள் என்ற கோபம் தமிழ்நாட்டு மக்களுக்கு அதிகமாக இருக்கின்றது. எனவே தமிழக மக்கள் ஜனநாயக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க உள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

பாஜகவின் தேர்தல் அறிக்கையைத் தேர்தல் அறிக்கை என்று சொல்வதை விட மக்கள் மீது ஏற்படுத்தும் தாத்குதல்களின் பிரகடனம் என்றே கூற வேண்டும். இந்திய ஜனநாயகத்திற்கு எதிராக அரசியல் சாசனத்திற்கு எதிராகப் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ம் இனைந்து தாக்குதல்களை ஊக்கப்படுத்தும் பிரகடனமாகத்தான் பாஜகவின் தேர்தல் அறிக்கை உள்ளது. பாஜக அரசு இந்த ஐந்து வருடமாக என்ன செய்தார்கள் என்று அறிக்கையில் சொல்லவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2047ல் என்ன செய்யப்போகிறார்கள் என்ற கருத்துகளை கூறி வருகிறார்கள். திருவாரூர் மாவட்டம் விவசாயிகள் விவசாயம் நிறைந்த மாவட்டம் அவற்றை பாதுகாக்க வேண்டும். அதைச் செய்யாமல் ஹைட்ரோகார்பன், மீத்தேன் மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிரான இந்த திட்டங்களை மக்கள் மீதும் மாநிலத்தின் மீதும் மத்திய அரசு திணிக்க விரும்புகிறது. அதை எப்படி மாநில அரசு ஏற்றுக்கொள்கிறது எனத் தெரியவில்லை.

மோடியினுடைய ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் பாஜகவின் பாசிச ஆட்சி அகற்றப்பட வேண்டும் என மக்கள் என்னுகிறார்கள். தமிழகத்தில் தற்போது செயல்பட்டுவரும் அதிமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது விரைவில் அதுவும் முடிவுக்கு வரும் நீடித்து நிற்க இயலாது" என்றார். அப்போது, நடிகர் ரஜினிகாந்த் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்புத் திட்டம் கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளது வரவேற்கிறேன் எனக் கூறியுள்ளாரே அதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்குப் பதில் கூறிய ராஜா, ``ரஜினிகாந்த் எத்தனைத் தேர்தல் அறிக்கை படித்தார் எனக்குத் தெரியவில்லை ஆனால்  பல கட்சிகள் நதிநீர் இணைப்பு பற்றி பேசியுள்ளது. அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை மட்டும் அவர் கண்ணில் பட்டது எப்படி என்பது எனக்குத் தெரியவில்லை. ரஜினிகாந்த் எந்த நிலையில் பேசுகிறார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

டி ராஜா

பிரதமர் மோடி எல்லோருக்குமான அரசு எல்லோருக்குமான திட்டங்கள் எனப் பேசினார். அதே நேரத்தில் இந்த அரசு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தினரா என ரஜினிகாந்த் பேச வேண்டும். தலித் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள் அதே போன்று பழங்குடிமக்கள் எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள் இதுகுறித்து ரஜினிகாந்த் கருத்துக் கூற தயாராக உள்ளாரா. மோடி அவர்கள் தமிழ்நாட்டிற்கு வரவிருக்கிறார். ஆனால் அவரை யாரும் ஊழலுக்கு அப்பாற்பட்டவர் எனக் கூற இயலாது. ஏன் என்றால் ரஃபேல் போர் விமானங்கள் பிரச்னைகள் வந்ததற்குப் பின்னர் மோடி அவர்கள் தனிப்பட்ட முறையில் ஊழலுக்கு எப்படி உறுதுணையாக இருந்தார் என்பது ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்பது அம்பலம் ஆகியுள்ளது" என்றார்.