நான்கு தொகுதிகளுக்கு தி.மு.க. வேட்பாளர்கள் லிஸ்ட் ரெடி! | dmk candidates list for four assembly by election

வெளியிடப்பட்ட நேரம்: 22:18 (12/04/2019)

கடைசி தொடர்பு:22:18 (12/04/2019)

நான்கு தொகுதிகளுக்கு தி.மு.க. வேட்பாளர்கள் லிஸ்ட் ரெடி!

மே 19-ம் தேதி இடைத்தேர்தலை சந்திக்கும் நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க இறுதி செய்துள்ளது.

பல்வேறு வழக்குகளால் இடைத்தேர்தல் நடத்தப் பெறாமல் இருந்த மூன்று தொகுதிகளுக்கும், சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் மறைவால் காலியான அத்தொகுதிக்கும் வரும் மே 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அறிவாலயம்

மே 19-ம் தேதி இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வை தி.மு.க. முடித்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரவக்குறிச்சிக்கு கரூர் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, திருப்பரங்குன்றத்துக்கு டாக்டர்.சரவணன், ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு ஒன்றியச் செயலாளர் சண்முகய்யா, சூலூருக்கு முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி ஆகியோரின் பெயர்கள் ‘டிக்’ செய்யப்பட்டுள்ளதாம்.

நாடாளுமன்றத் தேர்தலில் பொங்கலூர் பழனிசாமியின் குடும்பத்துக்கு தி.மு.க தரப்பில் எதுவும் செய்யவில்லை. ஆகவே, சூலூர் தொகுதியை அவருக்கு அளித்து ஆறுதல்படுத்தியுள்ளதாம் கட்சித் தலைமை. ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியச் செயலாளரான சண்முகய்யாவின் கட்சிப் பணிக்காக, அத்தொகுதி அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மறைந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில், ஜெயலலிதாவின் கைரேகை போலியானது என்பதை நிரூபிக்க உயர்நீதிமன்றம், ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் என ஏறி இறங்கிய டாக்டர்.சரவணனுக்கு திருப்பரங்குன்றம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜிக்காக அவரது ஆதரவாளர்கள் அவர் தி.மு.க.வில் இணைந்ததில் இருந்தே களமாட தொடங்கிவிட்டனர்.

அ.தி.மு.க. தரப்பிலும் வேட்பாளர்கள் பட்டியல் ரெடியாகி வருகிறது. 2011 சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கே.சி.பழனிசாமியிடம் தோல்வியடைந்த செந்தில்நாதனுக்கு மீண்டும் சீட் வழங்கப்படலாம் என்கிறார்கள். அப்போது கரூரில் போட்டியிட்ட செந்தில்பாலாஜி, அமைச்சர் பதவிக்கான ‘ரேஸில்’ தனக்கு போட்டியாக செந்தில்நாதன் வந்துவிடக் கூடாது என்று உள்ளடி வேலை செய்து செந்தில்நாதனை தோற்கடித்ததாக அ.தி.மு.க. வட்டாரங்கள் கூறுகின்றன. பழைய பகையை தீர்த்துக் கொள்ள செந்தில்நாதனும் தயாராகி வருகிறாராம்.