``எனது வாகனத்தைச் சோதனை செய்யாமல் கிளம்பமாட்டேன்!” - அதிகாரிகளிடம் நல்லகண்ணு காட்டிய நேர்மை | Police officials check Nallakannu's car

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (13/04/2019)

கடைசி தொடர்பு:08:00 (13/04/2019)

``எனது வாகனத்தைச் சோதனை செய்யாமல் கிளம்பமாட்டேன்!” - அதிகாரிகளிடம் நல்லகண்ணு காட்டிய நேர்மை

தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் வாகனத்தைச் சோதனையின்றி அதிகாரிகள்  அனுப்ப முயன்றனர். வாகனத்தைச் சோதனை செய்யாமல் இங்கிருந்து செல்லமாட்டேன் என்று கூறிய நல்லக்கண்ணு அதிகாரிகள் சோதனை செய்து ஒன்றும் இல்லை என்று கூறிய பிறகு தான் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். 

வாகனச் சோதனை

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் நாடு முழுவதும்  தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்காகப் பணம் கொடுப்பதற்காக, அதிகளவில் பணப்புழக்கம் ஏற்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனால், தற்போது மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தநிலையில்தான்  புதுக்கோட்டை- தஞ்சை நெடுஞ்சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்  நல்லக்கண்ணு அந்த வழியாக காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, அந்த காரை சோதனையிடுவதற்காக, அதிகாரிகள் நிறுத்தினர். அப்போது, முன் பக்கத்தில், நல்லக்கண்ணு அமர்ந்திருப்பதைப் பார்த்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஐயா, நீங்களா? என்று நலம் விசாரித்துவிட்டு, தேர்தலுக்காகச் சந்தேகப்படும்படியான அனைத்து வாகனங்களையும் சோதனை செய்யச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நல்லகண்ணு

ஆனால், உங்கள் வாகனத்தைச் சோதனை செய்தால், அதில் ஒன்றும் இருக்காது என்று எனக்கு மட்டுமல்ல, இங்கிருக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் தெரியும்" ஆகவே நீங்கள் இங்கிருந்து கிளம்பலாம் ஐயா என்று அவரை அனுப்பி வைக்க முயன்றனர். அப்போது, நல்லகண்ணு, ``சோதனை செய்வது உங்கள் கடமை எனவே, என்னுடைய வாகனத்தையும் சோதனை செய்யுங்கள். சோதனை செய்யாமல் நான் இங்கிருந்து கிளம்பமாட்டேன்” என்று கூறினார். மேலும், `யாராக இருந்தாலும், சரி அனைவரின் வாகனத்தையும் சோதனை செய்த பிறகு ஒன்றும் இல்லை என்று தெரிந்த பிறகு அனுப்புங்கள்' என்று அதிகாரிகளிடம் கூறினார்.
 

இதையடுத்து, காரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் பணம், பொருட்கள் ஏதும் இல்லை. சோதனைக்குப் பிறகு தான் கார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. நல்லகண்ணுவின் நேர்மையை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.