`உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை!' - ஜெயலலிதா பெயரால் அ.தி.மு.க - அ.ம.மு.க தொண்டர்கள் வாக்குவாதம் | A.I.A.D.M.K and A.M.M.K cadres clash in ooty election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (13/04/2019)

கடைசி தொடர்பு:08:20 (13/04/2019)

`உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை!' - ஜெயலலிதா பெயரால் அ.தி.மு.க - அ.ம.மு.க தொண்டர்கள் வாக்குவாதம்

நீலகிரி நாடாளுமன்ற தனி தொகுதியில் அ.தி.மு.க சார்பில்  வேட்பாளராக தியாகராஜன் களம் காண்கிறார்., நாடாளுமன்றத் தேர்தலை முதல் முறையாக சந்திக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ஒய்வுபெற்ற  ஐ. ஏ. எஸ் அதிகாரி  ராமசாமி களத்தில் உள்ளார்.

நீலகிரி தொகுதியை பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க நேரடி போட்டி இருந்தாலும் அ.தி.மு.க., அ,ம.மு.க. இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை ஓர் அணியில் பணியாற்றியவர்கள் இன்றைக்கு எதிர் எதிர் துருவங்களாக களத்தில் நிற்கின்றனர்.

அ.தி.மு.க - அ.ம.மு.க தொண்டர்கள் வாக்குவாதம்

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க.மற்றும் அ.ம.மு.க. ஆகிய  இரண்டு கட்சியினரும் ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் வேறு வேறு  வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது அ.ம.மு.க சார்பில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நபர்  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை  அம்மா என்று அழைக்காமல் ஜெயலலிதா என்று கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க வினா் சிலர், `நீங்கள் எப்படி எங்கள்  அம்மாவை பெயர் சொல்லி ஜெயலலிதா என்று அழைக்கலாம், அம்மா எங்கள் கட்சிக்கு மட்டும்தான் சொந்தமானவர்.

அ.தி.மு.க - அ.ம.மு.க தொண்டர்கள் வாக்குவாதம்

உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை' என  அ.ம.மு.க வினா் பிரசாரம் செய்து கொண்டிருந்த வாகனத்தை முற்றுகையிட்டனர். இதனால் இரண்டு கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சாலையில் கூட்டம் கூடியது.  உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  போலீஸார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் , மேலும் இரண்டு கட்சியினரும் ஒரே இடத்தில் பிரசாரம் செய்யக் கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனர்.