`7 மாதத்தில் சாலை வசதி!' - அதிகாரிகள் சமரசத்தால் மனம்மாறிய கிராம மக்கள் | Vellamanal village people decided to cast their vote after Officials organised talks

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (13/04/2019)

கடைசி தொடர்பு:09:00 (13/04/2019)

`7 மாதத்தில் சாலை வசதி!' - அதிகாரிகள் சமரசத்தால் மனம்மாறிய கிராம மக்கள்

சீர்காழி அருகே அதிகாரிகள் பேச்சு வார்த்தையால் வெள்ள மணல் மீனவ கிராம மக்கள் வாக்களிக்க முடிவு செய்துள்ளனர்.

election

நாகை மாவட்டம்  சீர்காழி அருகே வெள்ளமணல், மீனவகிராமம் உள்ளது. இங்கு 100 குடும்பங்களைச் சேர்ந்த 269 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சத்துணவுக்கூடம், அங்கன்வாடி மையம், கடல் மீனவர் கூட்டுறவு சங்கம் ஆகியவை இயங்கி வருகிறது. ஆனால்  சுதந்திரமடைந்த காலத்திலிருந்து  இக்கிராம போக்குவரத்திற்கு சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை வசதியில்லை. காரணம் இக்கிராமத்திற்குச் செல்லும் சாலை  அமைப்பதற்கான இடம்  வனத்துறைக்கு சொந்தமாக உள்ளது. இதனால் சாலை  அமைத்து தரமுடியாத நிலை இருந்து  வந்தது.

இதனால், அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து, கிராமத்திலுள்ள  அனைத்து வீடுகள் மற்றும் பொது இடங்களில் கருப்புத் துணியைக் கடந்த ஒருவார காலமாகக் கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். தேர்தல் நாளன்று ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை அதிகாரிகளிடம் திருப்பி ஒப்படைக்கப் போவதாகவும் அறிவித்தனர்.

இந்தநிலையில், மயிலாடுதுறை ஆர்.டி.ஓ கண்மனி, மாவட்ட வன அலுவலர் கலாநிதி, சீர்காழி வனச்சரக அலுவலர் கருப்பன், கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஒன்றிய ஆணையர் சுப்பையன் மற்றும் அதிகாரிகள் வெள்ளமணல் கிராமத்திற்கு இன்று சென்று அங்குள்ள கிராம முக்கியஸ்தர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் வெள்ள மணல் கிராமத்துக்குச் செல்ல 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 7 மாதத்திற்குள் நிச்சயமாக சாலை அமைத்து தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வரும் 18 -ம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவில் கலந்துகொண்டு வாக்களிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர் .

படங்கள்: பா.பிரசன்னா