`மாவட்ட நிர்வாகம் மக்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும்!' - தேனி `வென்டிலேட்டர் ஆம்புலன்ஸ்' சர்ச்சை | Theni ventilator ambulance issue

வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (13/04/2019)

கடைசி தொடர்பு:08:40 (13/04/2019)

`மாவட்ட நிர்வாகம் மக்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும்!' - தேனி `வென்டிலேட்டர் ஆம்புலன்ஸ்' சர்ச்சை

நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டார் தொகுதி அந்தஸ்து பெற்றிருக்கிறது தேனி மக்களவைத் தொகுதி. அ.தி.மு.க சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார், அ.ம.மு.க சார்பில் தங்கதமிழ்ச்செல்வன், காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்நிலையில், இவர்களை ஆதரித்துப் பல கூட்டணிக்கட்சி தலைவர்கள் தேனிக்கு வருகை தந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்ய, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேனிக்கு நேற்று வந்தார். இன்று ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரதமர் மோடி தேனி வருகிறார்.

ஆம்புலன்ஸ்

இரு தலைவர்களுக்கான பாதுகாப்பு, மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த ஆம்புலன்ஸ்களில் ஒன்று கூட தேனி மாவட்டத்தைச் சேர்ந்தது இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத  தகவலறிந்த வட்டாரத்தில் உள்ள ஒரு நபர், ``தேனி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் மொத்தம் 15 வண்டிகள் உள்ளன. அவை அனைத்திலும் ஆக்ஸிஜன் வசதி உள்ளதே தவிர, வென்டிலேட்டர் வசதி ஒரு ஆம்புலன்ஸ் வண்டியில் கூட இல்லை. விபத்தில் சிக்கிய நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பலர் உயிரிழக்கக் காரணம், செயற்கை சுவாசம் செலுத்தப் பயன்படும் இந்த வென்டிலேட்டர் இல்லாததுதான்.

போடி, கம்பம், சின்னமனூர், பாளையம், பெரியகுளம், ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளில் விபத்து ஏற்பட்டால், அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று முதலுதவி கொடுக்கப்படும். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டுசெல்லப்பட வேண்டும் என்ற சூழல் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, வென்டிலேட்டர் இல்லா ஆம்புலன்ஸ்களால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த உண்மை மக்களுக்கு தற்போதுதான் தெரியவருகிறது.

ஆம்புலன்ஸ்

இந்நிலையில், நேற்று ராகுல் காந்தி பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்திற்கு மொத்தம் 6 ஆம்புலன்ஸ்கள் வந்தன. அதில், வென்டிலேட்டர் பொருத்தப்பட்ட இரண்டு ஆம்புலன்ஸ்கள் இருந்தன. அவை இரண்டும் மதுரையில் இருந்து வந்தவை. இது ஒருபுறம் என்றால், இன்று பிரதமர் மோடி தேனிக்கு வருவதால், அவருக்கு என திண்டுக்கல், மதுரையில் இருந்து வென்டிலேட்டர் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ்கள் பிரசார மேடை அருகே வந்துவிட்டன. இதுமட்டுமல்லாமல், உயர் தொழில்நுட்பத்தோடு கூடிய நவீன ஆம்புலன்ஸ் ஒன்று அவருடனே இருக்கும். மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மோடி தேனி வருவதால், அது மதுரையில் நிறுத்தப்பட்டுள்ளது. தேனியில் வென்டிலேட்டர் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ் இருந்தால் மக்களுக்குப் பேருதவியாக இருக்கும்” என்றார்.

என்றோ ஒரு நாள் தேனி வரும் தலைவர்களுக்காக வென்டிலேட்டர் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ்களை அருகில் இருக்கு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கும் மாவட்ட நிர்வாகம், தினம் தினம் அவசர மருத்துவ உதவி தேவைப்படும் அப்பாவி மக்களை நினைத்துப்பர்க்காதது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.