`ஆளுங்கட்சியினர் ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்களில் பணம் கடத்துகிறார்கள்!' - கமல் குற்றச்சாட்டு | Kamalhassan slams ADMK

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (13/04/2019)

கடைசி தொடர்பு:12:19 (13/04/2019)

`ஆளுங்கட்சியினர் ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்களில் பணம் கடத்துகிறார்கள்!' - கமல் குற்றச்சாட்டு

ஆளும் கட்சியினர் ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்களில் பணம் கட்டுத்துகிறார்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டினார்.

சிவகங்கையில் கமல்ஹாசன்

சிவகங்கை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கவிஞர் சினேகனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் சிவகங்கை சண்முகராஜா கலையரங்கத்தில் பேசினார். ``இந்தத் தொகுதியிலிருந்து டெல்லிக்கு அனுப்பி வைத்தவர் உங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் போன்றோர் மீதான கோபத்தில்தான் கட்சி ஆரம்பித்தேன். எங்களது சொத்தே நேர்மைதான். இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு அது கிடையாது. இப்போதே அவர்களுக்கு எங்கள் மீது பயம் வந்துவிட்டது. எங்கள் வேட்பாளர் எதுவும் செய்யவில்லை என்றால் ராஜினமா செய்துவிடுவார். தமிழகத்தில் இரண்டு கழகங்களும் வெளியேற்றப்பட வேண்டும். யார் வேண்டுமானாலும் பிரதமராக வரட்டும். அவர்களிடம் தொகுதிக்கு வேண்டியதைக் கேட்கும் குரலாக நாங்கள் இருக்கிறோம். 

எங்களுக்கு எதிர்பாராத வெற்றி கிடைக்கும். தற்போதே எதிரிகளுக்குப் பதற்றம் வந்துவிட்டது. எங்கள் கட்சி என்ற குழந்தை எழுந்திருக்குமா, நடக்குமா என்று கூறியவர்கள் எல்லாம், எங்கள் வீறுநடையை எட்டிப்பிடிக்க முடியாமல் பின்புறம் வருகின்றனர். சிறு தொண்டர் படையுடன் கட்சியைத் தொடங்கினோம். எங்களுக்கு மக்கள் உதவியாக உள்ளனர். அவர்கள் தமிழகத்தின் மாற்றத்தின் தொண்டர்கள். எங்கள் கட்சியினரிடம் நாட்டைக் கொடுத்து பாருங்கள். ஆட்சியில் இருக்கும் குப்பையை அகற்றிவிடுவார். மற்றவர்கள் ஏமாற்றி சேர்த்த சொத்து எல்லாம் கையகப்படுத்தப்படும். பல் இல்லாத லோக்பாலுக்கு நாங்கள் ஆட்சிக்கு ஏற்கும்போது பல் கட்டுவோம். எங்கள் பிரதிநிதிகள் மீது குற்றச்சாட்டு வந்தால் ராஜினமா செய்ய வைத்துவிடுவோம். யாருக்கும் இல்லாத துணிச்சல் எங்களிடம் உள்ளது. நான் நேர்மையாக வரி கட்டிக்கொண்டு இருக்கிறேன். அதனால் கேட்க முடியும். ஏற்கெனவே இங்கே இருக்கும் எம்.பி-யும் வரி கட்டியதாகக் கூறுவார். அது பொய். 

காரைக்குடியில் பிரசாரம்

கல்வியில் பின்தங்கிய பகுதியாக சிவகங்கை உள்ளது. இன்றைய நிலைக்கு ஐ.டி. பார்க் வந்திருக்க வேண்டும். வேலைவாய்ப்பு 0.1 சதவிகிதம். நாங்கள் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவோம். 60,000 கிராமங்களில் ஏரிகளைத் தூர்வாரினாலே வேலை கிடைக்கும். மாணவர்களும் இலவசமாக வேலை செய்ய வேண்டும். இலவசமாகக் கொடுக்கிறதை ஏன் தடுக்கிறீர்கள் என்று கேட்கின்றனர். ஆட்சியாளர்கள் வரும்போது அழுக்கு வேட்டியோடு வந்தவர்கள் ஜரிகை வேட்டியுடன் தற்போது வருகிறார்கள். ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனத்தில் பணம் கடத்தபடுவதாகக் கூறப்படுகிறது. அது உன்மையானால் விரட்ட வேண்டும். காவல்துறையை ஏவல் துறையாக மாற்றி வருகிறார்கள். அரசு செய்ய வேண்டியதை எல்லாம் தனியாரிடம் கொடுத்துவிட்டு தனியார் செய்ய வேண்டிய சாராயத் தொழிலை அரசே ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வைத்து நடத்தும் அவல நிலை நம் நாட்டில் தொடர்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசுப் பள்ளிகள் தரம் உயர்ந்து பணக்காரரகள், இடம் கேட்டு கியூவில் நிற்க வேண்டிய நிலைக்குக் கொண்டு வருவோம்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க