`இரண்டு பேரும் விதி மீறிவிட்டனர்; தூத்துக்குடியில் தேர்தல் நடத்தக் கூடாது!' - தலைமைத் தேர்தல் ஆணையத்தில் கெளதமன் மனு | Gouthaman filed a complaint in EC

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (13/04/2019)

கடைசி தொடர்பு:13:36 (13/04/2019)

`இரண்டு பேரும் விதி மீறிவிட்டனர்; தூத்துக்குடியில் தேர்தல் நடத்தக் கூடாது!' - தலைமைத் தேர்தல் ஆணையத்தில் கெளதமன் மனு

திரைப்பட இயக்குநர் வ.கௌதமன், ``தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் கனிமொழி கொடுத்த வேட்புமனுக்கள் சட்ட விதிமுறைகளை மீறியது. தூத்துக்குடியில் நடைபெற உள்ள  தேர்தல்  நேர்மையான தேர்தல் இல்லை. அதை உடனடியாக நிறுத்த வேண்டும்” எனத் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்தார். 

கௌதமன் 

அது பற்றி அவரிடம் பேசினோம், ``1947-க்குப் பிறகு சுதந்திரம் அடைந்த இந்த 70 ஆண்டுகளில் சொல்ல முடியாத ஒரு கொடுங்கோல் ஆட்சி என்றால் அது தற்போது உள்ள மோடியின் பா.ஜ.க ஆட்சிதான். இதுவரைக்கும் இந்திய ஒன்றியம் சந்தித்திராத மிகக் கொடூரமான ஆட்சி இதில் சில மாநிலங்கள் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்கள் அவருடைய அன்பினால் பாசத்தினால் தப்பித்துள்ளது. தென் மாநிலங்களிலும் சில மாநிலங்கள் தப்பித்துள்ளன. ஆனால், குறிவைக்கப்பட்டு சொல்ல முடியாத சோகத்தையும் துன்பத்தையும் துயரத்தையும் மட்டுமே மோடியின் ஆட்சி பரிசாகக் கொடுத்துள்ளது என்றால் அது எங்களுடைய எங்கள் மக்களுடைய தமிழ்நாட்டுக்குத்தான். திரும்பிய பக்கமெல்லாம் மரண ஓலங்கள். விவசாயிகள் ஒரு பக்கம் மரணிக்கிறார்கள், மீனவர்கள் ஒரு பக்கம் மரணிக்கிறார்கள்.

டெல்லி

அதேபோல் மாணவர்கள் மீது  நீட் என்ற எமனை புகுத்தி, எங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளைப் பலி எடுத்துக்கிட்டு இருக்காங்க. இது அத்தனைக்கும் தற்போது இருக்கும் மோடி அரசுதான் காரணம்” எனக் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய கௌதமன், ``நீட், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் மீத்தேன் திட்டம் என்ற அனைத்து திட்டங்களையும் கொண்டுவந்தது யார் என்று பார்த்தால் இதற்கு முன்னால் இருந்த காங்கிரஸ் ஆட்சிதான்.

ஆக காங்கிரஸ் ஆட்சிக்கும் பி.ஜே.பி ஆட்சிக்கு ஒன்றும் வேறுபாடுகள் கிடையாது. காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ஸ்டெர்லைட், மீத்தேன், ஹைட்ரோகார்பன், நீட் போன்ற திட்டங்களை இழுத்துக்கொண்டு வந்து வாசலில்விட்டார்கள். அந்தத் திட்டங்களை பி.ஜே.பி-யின் மோடி அரசு உள்ளே இழுத்துக்கொண்டுவந்து செய்து முடித்துள்ளார்கள்.

இதன் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தல். இது எங்கள் மக்களை எங்கள் தமிழினத்தை எங்கள் தமிழ்நாட்டை முழுமையாகச் சிதைக்க நடத்தப்படுகிறது ஓர் ஜனநாயகப் படுகொலை இது. தமிழ்நாட்டில் குறிப்பாகத் தேர்தல் ஆணையம் என்ற ஒன்று இயங்குதா இல்லையா என்று தெரியவில்லை. ஏன் என்றால் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 2,000 கோடி முதல் 3,000 கோடி வரை வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக பணம் பதுங்கி வைக்கப்பட்டுப் பிரித்து கொடுக்கப்பட்டு வருகிறது. இதையெல்லாம் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து வருகிறது. டெல்லி தேர்தல் ஆணையம் அனைத்தையும் பார்த்துக்கொண்டே இருக்கிறது. மோடியின் கண் அசைவில் கை அசைவில்தான் இவ்வளவும் நடந்துகொண்டிருக்கிறது” என குற்றம் சாட்டினர்.

பேட்டி

குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் நானும் போட்டியிட்டேன். அங்கு போய் நான் வேட்புமனுத்தாக்கல் செய்தேன். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைக் கொண்டுவந்தது அ.தி.மு.க. திறந்து வைத்தது தி.மு.க. அதற்கு எதிராகப் போராடிய மக்களைச் சுட்டுக் கொன்றது பி.ஜே.பி. இன்றைக்குத் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் ஸ்டெர்லைட்டைத் திறந்து வைத்த தி.மு.க சார்பில் கனிமொழி. என் மக்களைச் சுட்டுக் கொன்ற பி.ஜே.பி-யின் சார்பில் தமிழிசை சௌந்தரராஜனும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் இருவருடைய வேட்புமனுக்களும் விதிமுறைகளை மீறியது” என்றார்.

``தமிழிசை சௌந்தரராஜன் பாரத் பெட்ரோலியத்தில் அரசுக்கு  ஆதாயம் வரக்கூடிய துறையில் பதவியில் அவர் இருக்கிறார். அந்தப் பதவியை ராஜினாமா செய்யாமலேயே வேட்புமனுத்தாக்கல் செய்தார். அதை எதிர்த்து தி.மு.க-வின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் முறையிடப்பட்டது. இதனால் தமிழிசை சௌந்தரராஜனுடைய மனு ஏற்கப்படாமல் 1.30 மணி வரை தள்ளி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் மற்ற வேட்பாளர்களின் மனுக்கள் சிறு பிழைகள் இருந்தால்கூட நிராகரிக்கப்பட்டன.

26-ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விசாரணை நடைபெறுகிறது. ராஜினாமா கடிதம் எங்கே என தமிழிசை சௌந்தரராஜனிடம் கேட்கிறார்கள். அவர் இல்லை எனச் சொல்லிவிட்டுப் போயிடுகிறார். 1.30 மணிக்குத் தள்ளி வைக்கப்படுகிறது. பின்னர் 1.30 மணியளவில் தமிழிசை சார்பில் ராஜினாமா கடிதம் தரப்படுகிறது. 22-ம் தேதியே ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டதாகக் கூறுகிறார்கள். 

டெல்லி

23-ம் தேதி பாரத் பெட்ரோலியத்துக்கு ராஜினாம கடிதம் போயிருக்கும். 24, ஞாயிற்றுக்கிழமை. எந்த அரசு நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை இவர்களுக்கான ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டு அனுப்பியுள்ளார்களாம்? 25-ம் தேதி இவர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்கிறார்கள். 26-ம் தேதி தி.மு.க குற்றச்சாட்டு வைக்கிறது. விசாரணை நடைபெறுகிறது. அப்போதுகூட ராஜினாமா கடிதத்தை அவர்கள் கொடுக்கவில்லை. 1.30 மணிக்கு எப்படி வந்தது ராஜினாமா கடிதம்? ஆக பி.ஜே.பி அதிகார வர்க்க அரசு அதிகாரம் கையில் உள்ளதால் அனைவரையும் கையில் போட்டுக்கொண்டு சட்ட விதி மீறல்கள் செய்து வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதைப்போல் கனிமொழியின் மீது பி.ஜே.பி-யின் சார்பில் கனிமொழியின் சொத்து மதிப்பு சரியாகக் காட்டப்படவில்லை எனக் குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் கனிமொழியின் வேட்புமனுவும் 1.30 மணியளவில் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இருவரையும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வரச் சொல்கிறார். இருவருமே வரவில்லை. வராமலேயே இருவரின் மனுக்களுமே இறுதியில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட உயிர்களுக்கு நீதி கேட்டுதான் நாங்கள் அங்கபோய் நின்றோம். ஆனால், சுட்டுக் கொல்ல அதிகாரத்தை உத்தரவு கொடுத்தவர்களுக்கும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து வைத்தவர்களுக்கும் என இருவருக்கும் விதியை மீறி ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றால் இவர்கள் செய்வது ஜனநாயகப் படுகொலை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பச்சைப் படுகொலை. இப்போது ஏப்ரல் 18 நடக்க இருக்கும் தேர்தல் ஜனநாயகப் படுகொலை. இந்தத் தேர்தல் எங்கள் மொழியை அழிக்க எங்கள் இனத்தை எங்களுடைய வளத்தை அழிப்பதற்கான தேர்தல். இந்தத் தேர்தல் சரியான முறையில் நடைபெறாது. மீண்டும் மோடி வந்தால் இந்தியா 500 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும்.

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி முடிந்து மே 23-ம் தேதி வரை வாக்கு பெட்டிகள் இருக்கப்போகிறது. ஆக தேர்தல் வேட்புமனு கொடுத்திலே இவ்வளவு ஊழல் என்றால் இதன் பிறகு, என்ன ஆகும் என்பது பற்றிய மனுவைத் தான் டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளோம்.

இங்கு நடப்பது மக்கள் ஆட்சி என்றால் தூத்துக்குடியில் தேர்தலை ரத்துசெய்ய வேண்டும். மோடி அரசு தமிழகத்தை அழிப்பதற்கான அரசு என்பதை உலகிற்கு அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சியரிடம் கேட்டோம். எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுங்கள் என்றார். நானும் எழுத்துபூர்வமாகத் தருகிறேன் என்றவர் அனுமதி தரவில்லை. இது நேர்மையற்ற தேர்தல். தேர்தல் ஆணையம் அதற்குத் துணைபோகிறது  இந்த தேர்தலில் நாம் தக்க பாடம் புகட்ட வேண்டும்” என மக்களுக்கு இயக்குநர் கௌதமன் வேண்டுகோள் வைத்தார்.