காதலிப்பதாகக் கூறி சிறுமிக்குப் பாலியல் தொல்லை! - திருப்பூரில் இளைஞர் கைது | Tiruppur youth arrested in Pocso act

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (13/04/2019)

கடைசி தொடர்பு:14:29 (13/04/2019)

காதலிப்பதாகக் கூறி சிறுமிக்குப் பாலியல் தொல்லை! - திருப்பூரில் இளைஞர் கைது

காதலிப்பதாக ஆசை வார்த்தைக் கூறி, சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை திருப்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாலியல் தொல்லை

திருப்பூர் காங்கேயம் ரோடு வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த சிறுமி, தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கியிருந்து, வீட்டருகே உள்ள ஒரு பனியன் கம்பெனியில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 வருடங்களாக சிறுமி அங்கு பணியாற்றி வந்த நிலையில், சமீபத்தில் அங்கு பணிக்குச் சேர்ந்த முகமது சுல்தான் சபீக் என்பவருடன் சிறுமிக்குப் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்துக் கடந்த 2 மாதங்களாகத் தொடர்ந்து அவரைக் காதலித்து வருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி, அச்சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார் சபீக். அத்துடன் அதைப் போட்டோவாக எடுத்தும், அதை வைத்து சிறுமியை மிரட்டித் தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டும் வந்துள்ளார்.

இதனால் பயந்துபோன சிறுமி, சாணிப்பவுடரைக் கரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிறுமியை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதைத்தொடர்ந்து சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்திலும் புகார் அளித்தனர். அதனடிப்படையில் இளைஞர் சபீக்கிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், அவர்மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணையை நடத்தி வருகின்றனர்.