`இது முதல்வர் பேசும் பேச்சா... நாலாந்தர பேச்சாளர்களைவிட மோசம்!' - கொதித்த ஸ்டாலின் | Stalin slams CM EPS In trichy election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (13/04/2019)

கடைசி தொடர்பு:17:52 (13/04/2019)

`இது முதல்வர் பேசும் பேச்சா... நாலாந்தர பேச்சாளர்களைவிட மோசம்!' - கொதித்த ஸ்டாலின்

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகம் முழுக்க பிரசாரம் செய்து வரும், தி.மு.க தலைவர் ஸ்டாலின் திருச்சியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் திருநாவுக்கரசரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். திருச்சி உழவர் சந்தை பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றும் ஸ்டாலின் அடுத்த நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 17 இடங்களில் பிரசார பயணம் மேற்கொண்டு பேச இருக்கிறார்.

ஸ்டாலின் பிரசாரம்

திருச்சி உணவு சந்தை மைதானத்தில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ-க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு உள்ளிட்ட ஆகியோர் சகிதமாக மேடை ஏறிய ஸ்டாலின் பேச ஆரம்பித்தார்.காலை 9 மணிக்குத் தொடங்குவதாக இருந்த கூட்டம் சரியாக 9.30 மணியளவில் தொடங்கியது. இறுதியாக ஸ்டாலின் மைக் பிடிக்க 10.20 ஆனது.நேரம் ஆக ஆக வெயிலின் கொடுமை தாங்காமல் கூடியிருந்த கூட்டம் மெள்ள மெள்ள நகர மைதானத்தில் பாதி நாற்காலிகள் காலியாகக் கிடந்தன.

திமுக திருச்சி பொதுக்கூட்டம்

 

இறுதியில் பேச ஆரம்பித்த ஸ்டாலின், ``தமிழகத்தில் நடக்கும் ஆட்சியின் கொடுமையைவிட அடிக்கும் வெயிலின் கொடுமையில் மிகவும் குறைவானதுதான். மத்தியில் ஒரு சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. அதேபோல் மாநிலத்தில் ஒரு உதவாக்கரை ஆட்சி நடக்கிறது. இவர்களை அனுப்புவதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர் திருநாவுக்கரசரை இந்தத் தேர்தலில் திருச்சியில் நிறுத்திக் கொள்ளவும். இல்லை இல்லை உங்களிடம் ஒப்படைத்து இருக்கிறோம்.

 

திராவிட இயக்க வரலாற்றில் மிக முக்கியமான இடமாக விளங்கும் திருச்சி, திருநாவுக்கரசரை வெற்றி பெற வைத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பார்கள் என்று நம்புகிறோம். தி.மு.க தேர்தலில் போட்டியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டது திருச்சிதான்.அண்ணாவுக்குப் பிறகு கலைஞர் ஐம்பெரும் முழக்கங்களை முன்வைத்தது இதே திருச்சியில்தான். திருச்சிக்கும் தி.மு.க-வுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு.

தலைவர் கலைஞர் பிறந்த ஊர் திருவாரூர் என்றாலும், அவர் அடிக்கடி சொல்வார் திருச்சி நான் வளர்ந்த ஊர் அவர் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமான ஊர் என்பார். அந்த அடிப்படையில் கலைஞர் பிறந்த ஊரான திருவாரூர் எனது பிரசாரத்தை 20 நாள்களுக்கு முன்பு தொடங்கி தமிழகத்தின் பல்வேறு நாடாளுமன்றத் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட நான் இன்று திருச்சியில் உங்கள் முன் பேசிக் கொண்டிருக்கிறேன்.

ஒருவேளை கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயமாக இந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு தி.மு.க கூட்டணி வேட்பாளர் திருநாவுக்கரசருக்கு வாக்களியுங்கள் என நேரில் கேட்டிருப்பார். இன்று நம்மோடு இல்லை என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளே என அவர் சொல்லும் கரகர குரல் கேட்ட தொண்டர்கள் காத்துக் கிடக்கிறார்கள். அவர் இல்லாத நிலையில் முதல் முதலில் நடக்கும் இந்தத் தேர்தலில் தி.மு.க தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் உங்கள் முன் தி.மு.க-வுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். நேரு மிக நல்லவர் அவர் நிச்சயம் திருநாவுக்கரசரை வெற்றி பெறச் செய்வார்.

அண்ணாவும் கலைஞரும் உருவாக்கிய `மத்தியில் கூட்டாட்சி... மாநிலத்தில் சுயாட்சி' என்கிற முழக்கத்தை காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. ஒருவேளை அண்ணாவும் கலைஞரும் உயிரோடு இருந்திருந்தால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கட்டியணைத்து உச்சிமோந்து இருப்பார்கள். தி.மு.க-வைப் பொறுத்தவரை தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன். அதேபோல் காங்கிரஸ் தேர்தலில் சூப்பர் ஹீரோ. ஆனால் அ.தி.மு.க - பி.ஜே.பி - பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட மூன்று கட்சிகள் இருக்கிற கூட்டணியைப் பார்த்தால் அந்தக் கட்சிகள் மட்டுமல்லாமல் அந்தத் தேர்தல் கூட்டணி, முரண்பாடுகளின் உச்சம் என்பது தெரியவரும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க-வினர் பிரியாணி சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் அடாவடி செய்ததாக கூறுகிறார். என்னை ஸ்டாலின் சீண்டினால் ஸ்டாலின் காது ஜவ்வு கிழிந்துவிடும் என்கிறார். இது ஒரு முதல்வர் பேசும் பேச்சா அந்தக் கட்சியின் நாலாந்தர பேச்சாளர்கள் பேசுவதைவிட மிக கேவலமானது. எடப்பாடி பழனிசாமி அவர்களே, கொஞ்சம் பொறுத்திருங்கள் தேர்தல் முடிவுகள் வரட்டும் அதன் பிறகு உங்கள் வாழ்க்கையே கிழிந்து தொங்கப்போகிறது.

எல்லோருக்கும் இந்தியாவில் இருப்பவர் பிரதமர் கிடைப்பார். ஆனால், பிரதமர் மோடியோ வெளிநாடு வாழ் இந்தியர். அவர் தேர்தல் வந்ததிலிருந்து இந்தியாவுக்குள் வந்து, தமிழகத்துக்கு அடிக்கடி வந்து செல்கிறார். கடந்த ஐந்து வருடங்களில் அவர் இந்திய மக்களை மறந்துவிட்டார். நாம் தமிழகம் முழுக்க பிரசாரம் செய்து தி.மு.க கொண்டு வந்த திட்டங்களை சொல்லி வாக்குகளை கேட்டு பிரசாரம் செய்கிறோம். ஆனால், பி.ஜே.பி-யும் அ.தி.மு.க-வும் என்ன சொல்லி கேட்கிறார்கள். அவர்கள் கொண்டுவந்த ஏதாவது திட்டங்களைச் சொல்லி வாக்கு கேட்கிறார்களா?

காலியான சேர்கள்

இன்று காலையில் ஒரு வாட்ஸ் அப் செய்தி படித்தேன், அப்போதெல்லாம் வங்கியில் கொள்ளை அடிப்பார்கள், இப்போது வங்கியை கொள்ளை அடிக்கிறார்கள். அப்போதெல்லாம் விவசாயத்தை புறக்கணிப்பார்கள். ஆனால், இப்போது விவசாயத்தையே புறக்கணிக்கிறார்கள். அப்போதெல்லாம் வேட்பாளரை விலைக்கு வாங்குவார்கள். இப்போது கட்சிகளை எல்லாம் விலைக்கு வாங்குகிறார்கள். முன்பெல்லாம் சர்க்கஸ் கோமாளிகள் இருப்பார்கள். இப்போது அரசியலில் சர்க்கார் இடையே கோமாளிகளின் அமைத்து இருக்கிறார்கள் என்று முடிந்தது அந்த கவிதை.

ராகுல்காந்தி அரச குடும்பத்தில் பிறந்தாலும் ஏழை மக்களின் பக்கம் இருக்கிறார். ஆனால், ஏழையாக பிறந்த மோடி, பணக்காரர்களின் செல்வந்தர்களின் காவல்காரர்களாக இருக்கிறார். அதனால்தான் நாட்டை சுரண்டிய லலித்மோடி உள்ளிட்ட பெரும் பணக்காரர்கள் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார்கள். மக்களுக்கான எண்ணற்ற திட்டங்களை உள்ளடக்கிய காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நிறைவேறுவதற்கும் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கும் தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்" என முடித்தார். ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும்போதே கூட்டம் கலைந்து சென்றதால் திருச்சி மாவட்டத் தி.மு.க நிர்வாகிகள் பெரும் பதற்றத்தில் செய்வதறியாமல் இருந்தார்கள்.