‘ஃபுட் பாய்சனான சிக்கன் பிரியாணி; பறிபோன சிறுமியின் உயிர்!’ - மேலும் 3 குழந்தைகளுக்கு சிகிச்சை | Chicken biriyani with food poison; The life of the lost girl! '- More 3 children are treated

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (13/04/2019)

கடைசி தொடர்பு:18:20 (13/04/2019)

‘ஃபுட் பாய்சனான சிக்கன் பிரியாணி; பறிபோன சிறுமியின் உயிர்!’ - மேலும் 3 குழந்தைகளுக்கு சிகிச்சை

அரக்கோணம் அருகே முந்தைய நாள் சிக்கன் பிரியாணியைச் சுட வைத்துச் சாப்பிட்டதால் 5 வயதுச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். மேலும், மூன்று குழந்தைகள் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

உயிரிழப்பு

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த தண்டலம் புதுகாலனியைச் சேர்ந்தவர் சீனிவாசன். கூலித் தொழிலாளி. இவரின் மனைவி கனகா. இவர்களுக்கு சுமித்ரா (11), மோகன்ராஜ் (8), கோபிகா (5) என மூன்று குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு எதிர் வீட்டில் வசிக்கும் உறவினர் சிக்கன் பிரியாணி கொடுத்தார். ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் சூடாக்கி அந்தப் பிரியாணியைத் தனது மூன்று குழந்தைகள் மற்றும் உறவினரின் குழந்தை மோத்தீஸ் (3) ஆகியோருக்குச் சீனிவாசன் மனைவி கொடுத்தார்.

பழைய பிரியாணியைச் சாப்பிட்டதால் 4 குழந்தைகளும் வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு மயங்கினர். பதறிப்போன உறவினர்கள், குழந்தைகளை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அதற்குள், சிறுமி கோபிகா பரிதாபமாக உயிரிழந்தாள். மற்ற மூன்று குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. பழைய பிரியாணி ‘ஃபுட் பாய்சன்’ ஆனதால் குழந்தையின் உயிர் பறிபோனதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே மீளமுடியாத சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.