`நீங்கள் செய்த உதவியை என்றைக்கும் மறக்க மாட்டோம்' - கனிமொழியை நெகிழவைத்த பேராவூரணி மக்கள்! | people who are affected in gaja cyclone are campaign for kanimozhi

வெளியிடப்பட்ட நேரம்: 17:17 (13/04/2019)

கடைசி தொடர்பு:17:19 (13/04/2019)

`நீங்கள் செய்த உதவியை என்றைக்கும் மறக்க மாட்டோம்' - கனிமொழியை நெகிழவைத்த பேராவூரணி மக்கள்!

கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு கேட்டு டெல்டா மக்கள் தூத்துக்குடியில் பிரசாரம் செய்துள்ளனர்.

கனிமொழி

தமிழக டெல்டா மாவட்டங்களைப் புரட்டி போட்டது கடந்த நவம்பர் மாதம் நடந்த கஜா புயல். அப்போது வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு உதவிய பலரில் தி.மு.க எம்.பி கனிமொழியும் ஒருவர். பேராவூரணி பகுதியில் உள்ள கிராம மக்கள் உணவின்றி தவிப்பதை அறிந்து உடனடியாக லாரிகளில் பொருள்களை அனுப்பி மக்களின் பசியைத் தீர்த்தார். மேலும், ``இங்கு அடுப்பு அணையவே கூடாது. எத்தனை பேர் வந்தாலும் சோறு போட்டுக்கொண்டே இருங்கள்" எனக் கூறி பல நாள்கள் மக்களின் பசியைத் தீர்த்தார். கனிமொழியின் இந்த உதவிக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் பேராவூரணியையொட்டிய 16 கிராம மக்கள் அவருக்காகத் தூத்துக்குடி தொகுதியில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி தொகுதிக்கு உட்பட்ட சத்திரப்பட்டி கிராமத்துக்குச் சென்ற சுமார் 70-க்கும் மேற்பட்ட பேராவூரணி மக்கள் அங்குள்ளவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

பிரசாரம்

``யார் என்றே தெரியாத எங்களுக்கே பல உதவிகள் செய்தது மட்டுமல்லாமல் நிறைய நாள் பசியாற்றினார். சம்பந்தமே இல்லாத எங்களுக்கே இவ்வளவு உதவிகள் செய்தார் என்றால், அவர் போட்டியிடும் தொகுதிக்கு நிறைய நல்லது செய்வார்" என நோட்டீஸ் அடித்து விநியோகித்துள்ளனர்.  ஆனால், இவர்கள் வாக்கு சேகரிக்கும் விஷயம் கனிமொழிக்குத் தெரியாத நிலையில் அவரும் சத்திரப்பட்டி வழியாகச் செல்லும்போது இவர்களைப் பார்த்துள்ளார். இவர்களின் நோட்டீஸைப் பார்த்து மிகவும் நெகிழ்ந்துபோனவர் பிரசார வாகனத்தை விட்டுக் கீழிறங்கி அந்த மக்களிடம் சிறிது நேரம் பேசினார்.

பிரசாரம்

பின்னர், ``வெற்றிபெற்றவுடன்  நிச்சயமாக பேராவூரணி பகுதிக்கு வருகிறேன்" என வாக்குறுதி கொடுத்தார். கூடவே நீங்கள் எங்கு தங்கியுள்ளீர்கள் ஏதாவது உதவி வேண்டுமா எனக் கேட்க, `எந்த உதவியும் வேண்டாம். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் செய்த உதவியை மறக்கவில்லை. உங்களுக்காகப் பிரசாரம் செய்யவே வந்தோம். இன்னும் ஓரிரு நாள்கள் இங்கு தங்கியிருந்து பிரசாரம் செய்வோம்" எனக் கூறி நெகிழ வைத்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க