‘சிறுபான்மையினர் வாக்குகளுக்காகத் தினகரன் இப்படிப் பேசுகிறார்’ - ஜவாஹிருல்லா காட்டம் | jawahirullah Slams TTV Dhinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (13/04/2019)

கடைசி தொடர்பு:18:32 (13/04/2019)

‘சிறுபான்மையினர் வாக்குகளுக்காகத் தினகரன் இப்படிப் பேசுகிறார்’ - ஜவாஹிருல்லா காட்டம்

அ.ம.மு.க-விடம் நாங்கள் கூட்டணி குறித்துப் பேசியதாக டி.டி.வி.தினகரன் அவதூறு பிரசாரம் செய்து வருகிறார். அதில் உண்மையில்லை. சிறுபான்மை மக்களின் வாக்குகளைக் கவர டி.டி.வி.தினகரன் தவறான தகவலைப் பரப்பி வருகிறார் என மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பேசினார். 

ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரான ஜவாஹிருல்லா நெல்லையில் தி.மு.க வேட்பாளர் ஞானதிரவியத்தை ஆதரித்துப் பிரசாரம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரை நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லாமல் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து நிலைகளையும் பின்னோக்கிக் கொண்டு சென்றுவிட்டது. 

2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி சார்பாக வெளியிடப்பட்ட 52 பக்கம் கொண்ட தேர்தல் அறிக்கையில் 549 வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், அதில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. தற்போது 2019-ம் ஆண்டு நடக்கும் தேர்தலுக்கான அறிக்கையில் பாரதிய ஜனதா வெறும் 75 வாக்குறுதிகளை மட்டுமே அளித்துள்ளது. 

கடந்த ஐந்து வருட ஆட்சியில் பெட்ரோல் விலை 200 சதவிகிதமும் டீசல் விலை 400 சதவிகிதமும்  உயர்ந்திருக்கிறது. விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் அறிவித்திருப்பது ஏமாற்றும் வேலை, ஏற்கெனவே முதியோர் ஓய்வூதியத் திட்டம் அமலில் இருக்கிறது. பிரதமர் மோடி பெருமுதலாளிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் மட்டுமே காவலாளியாக இருக்கிறார். அவர் சாமானிய மக்களுக்குக் காவலாளியாக இருக்கவில்லை. 

ஜவாஹிருல்லா

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் என்பது 2032-ம் ஆண்டுதான் செயல்பாட்டுக்கு வரும். எனவே இதுவும் ஒரு மோசடித் திட்டம். மக்களவைத் தேர்தலில் நாங்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தோடு இணைந்து தேர்தலில் போட்டியிட முன்வந்ததாக டி.டி.வி.தினகரன் அவதூறு பரப்புகிறார். நாங்கள் அவர்களோடு கூட்டணி குறித்துப் பேசவில்லை. ஆனால், சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் தினகரன் தவறான தகவலைப் பேசிவருகிறார். 

ஒட்டப்பிடாரம் , திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் தி.மு.க-வுக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும். இந்த நான்கு தொகுதிகளிலும் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வோம்’’ எனத் தெரிவித்தார்.