தலித்துகள் மீதான தாக்குதல் குறித்து பேச நடிகர் ரஜினிகாந்த் தயாரா ? டி.ராஜா காட்டமான கேள்வி | D.Raja raised a question against actor rajinikanth

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (13/04/2019)

கடைசி தொடர்பு:21:30 (13/04/2019)

தலித்துகள் மீதான தாக்குதல் குறித்து பேச நடிகர் ரஜினிகாந்த் தயாரா ? டி.ராஜா காட்டமான கேள்வி

பட்டியிலன மக்கள் மீதான தாக்குதல் குறித்து பேச நடிகர் ரஜினிகாந்த் தயாரா என டி.ராஜா காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஜினிகாந்த்

டெல்டா மாவட்டங்களில் தி,மு.க கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை பாராட்டியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தலித் மற்றும் பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல் குறித்து கருத்து கூற தயாராக உள்ளாரா என காட்டமாக கேள்வி எழுப்பியதோடு மட்டுமல்லாமல், நடிகர் ரஜினிகாந்த் மீது கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்துள்ளார். இதுகுறித்து பேசும் டி.ராஜா ‘’அனைத்துக் கட்சியினரும் நதி நீர் இணைப்பு குறித்து பேசி வருகிறார்கள். இதெல்லாம் நடிகர் ரஜினிகாந்தின் கண்களில் படவில்லை. ஆனால் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள நதிநீர் இணைப்பு மட்டும் அவரது பார்வையில் பட்டது எப்படி என தெரியவில்லை. இதை அவர் புகழ்வதற்கான காரணம்தான் என்னவென்று தெரியவில்லை.  

டி ராஜா

பிரதமர் நரேந்திர மோடி, இது எல்லோருக்குமான அரசு என சொல்லிக் கொள்கிறார். மத்திய அரசின் திட்டங்கள் அனைவருக்கும் பொதுவாக செயல்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்க வேண்டும். தற்போதைய பா.ஜ.க. ஆட்சியில் தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் கருத்து கூற வேண்டும்” என காட்டமாக பேசினார். மேலும் அவர் பேசுகையில் ’’பொதுத்துறை நிறுவனங்களை இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து ஆதரித்து வருகிறது. அதேசமயம் ஒ.என்.ஜி,சி நிறுவனம், வேதாந்தா என்ற கார்ப்பரேட் நிறுவனத்துடன் இணைந்து மாநில அரசுக்கு எதிராக செயல்படுவதை ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம்” என தெரிவித்தார்.