"தேர்தலுக்கு பிறகு ஸ்டாலின்தான் முதல்வர்" - செந்தில் பாலாஜி ஆருடம்! | DMK- Congress alliance won major seats in tamilnadu says Senthil Balaji

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (14/04/2019)

கடைசி தொடர்பு:07:00 (14/04/2019)

"தேர்தலுக்கு பிறகு ஸ்டாலின்தான் முதல்வர்" - செந்தில் பாலாஜி ஆருடம்!

 "தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். நடைபெறும் 22 சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலில் அ.தி.மு.க டெபாசிட் இழக்கும். தி.மு.க அமோக வெற்றி பெறும். அப்போது, ஸ்டாலின்தான் தமிழகத்தின் முதல்வராக அமர்வார்" என குளித்தலையில் முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தல் வேட்பாளருமான செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்தார்.

செந்தில்  பாலாஜி


 தமிழகத்தில் வரும் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக, அனைத்துக் கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் குதித்திருக்கிறார்கள். தமிழகம் மற்றும் புதுவை மாநிலம் உள்ளிட்ட நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு பொதுத்தேர்தலும், காலியாகவுள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் வரும் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இன்னும் காலியாக உள்ள அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை வரும் மே19 ம் தேதி அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம். இந்நிலையில், தி.மு.க கட்சி தலைமை அந்த நான்கு சட்டமன்றத் இடைத்தேர்தலுக்கும் வேட்பாளர்களை முதலில் அறிவித்திருக்கிறது. அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஸ்டாலின்

இந்நிலையில், குளித்தலைப் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி,"அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தி.மு.க தலைவர் ஸ்டாலின் எனக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். ஏற்கனவே, அறிவிக்கப்பட்டிருக்கும் 18 தொகுதியின் இடைத்தேர்தல் மற்றும் தற்போது அறிவித்துள்ள 4 சட்டப்பேரவை தொகுகளின்ன் இடைத்தேர்தல் என மொத்தம் 22 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர்கள் அமோகமாக வெற்றி பெறுவார்கள். தி.மு.க தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக அமருவார். அதே போல நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். இதை தற்போது மக்கள் உறுதி செய்துள்ளனர். நடைபெற இருக்கும் 22 சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான அ.தி.மு.க அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழக்கும்.  22 தொகுதியின் இடைத்தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெறும். விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது, இந்த தேர்தலுக்கு பிறகு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக அமர்வார்" என்று பேசினார்.