‘நான் பேசிவிட்டேன்; ஸ்டாலின் பதிலை கேட்டு சொல்லுங்கள்!’- பிரசாரத்தில் அதிரடித்த முதல்வர் | TN Chief Minister Palanisamy slams dmk Leader MKStalin

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (14/04/2019)

கடைசி தொடர்பு:07:30 (14/04/2019)

‘நான் பேசிவிட்டேன்; ஸ்டாலின் பதிலை கேட்டு சொல்லுங்கள்!’- பிரசாரத்தில் அதிரடித்த முதல்வர்

"காவிரி தீர்ப்புக் கிடைத்து 10 ஆண்டாகியும் தண்ணீர் கிடைக்கவில்லை. ஜெயலலிதா சட்டப்போராட்டம் நடத்தி, காவிரி விவகாரத்தில் வெற்றிப்பெற்றார். காவிரி பிரச்னைக்காக, மாநிலப் பிரச்னைகளுக்காக 21 நாள்கள் போராடினோம். ஆனால், தி.மு.க ஒருநாள்கூட காவிரிக்காக மக்களவையில் போராடவில்லை" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கரூரில் பேசினார்.

எடப்பாடி பழனிசாமி


 தமிழகத்தில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் அனல் பறக்கும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் குதித்திருக்கிறார்கள். தங்கள் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய கட்சிகளின் முன்னணி தலைவர்கள் பலரும் தமிழகம் முழுக்க சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், கரூர் மக்களவை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் தம்பிதுரைக்கு வாக்கு கேட்டு, கரூர் அரவக்குறிச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

 

அப்போது பேசிய அவர், "மத்தியில் நல்ல ஆட்சி வேண்டும். அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி என்பது கருத்து ஒற்றுமையால் அமைந்தக் கூட்டணி. ஆனால், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி பெயரளவிற்கான கூட்டணி. 'நான் பிரதமரானவுடன், மேக்கேதாட்டூவில் அணை கட்டப்படும்,  காவிரி மேலாண்மை ஆணையத்தை கலைப்பேன்' என ராகுல் பேசியுள்ளார். ஆனால், காவிரி தீர்ப்பு கிடைத்து 10 ஆண்டாகியும், காவிரியில் இன்னும் தண்ணீர் கிடைக்கவில்லை.  காவிரி பிரச்னைக்காக ஜெயலலிதா சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார். காவிரிக்காக, மாநிலப் பிரச்னைகளுக்காக 21 நாள்கள் போராடினோம். ஆனால், தி.மு.க ஒரு நாள்கூட காவிரிக்காக மக்களவையில் போராடவில்லை. இதற்கு ஸ்டாலின் என்ன பதில் கூறுகிறார் என்று பாருங்கள். அதை அடுத்த கூட்டத்தில் தெரிவியுங்கள். காவிரியை பாலைவனமாக்க காங்கிரஸ் கட்சியினர் முயற்சிக்கின்றனர். 

தம்பிதுரை


 அ.தி.மு.க மட்டுமே சிறுபான்மையின மக்களை காக்கும் இயக்கம். தி.மு.க,  பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து மத்திய அரசில் அங்கம் வகித்தது.  தி.மு.க - பாஜக கூட்டணி வைத்தால், அது மதவாதம் அல்ல. அதேநேரம், அ.தி.மு.க கூட்டணி வைத்தால் மட்டும் அது மதவாதமாகிவிடுமா. கொள்கை வேறு கூட்டணி வேறு. இஸ்லாமிய மக்களுக்கு ஜெயலலிதா அரசு எண்ணற்ற திட்டங்களை வழங்கியுள்ளது.

தம்பிதுரை தொடர்ந்து கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று வருகிறார். சிறுபான்மையின மக்களுக்கு எதாவது இடையூறு செய்தாரா இல்லையே. அரவக்குறிச்சி, க.பரமத்தி பகுதிகளுக்கு ரூ.220 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் தொடங்கும். ஸ்டாலினுக்கு, ஆ. ராசவுக்கு நெருங்கிய நண்பரான சாதிக்பாட்சா உயிரிழந்தது குறித்து அவரது மனைவி குடியரசு தலைவரிடம் மனு கொடுத்துள்ளார். அந்த மனு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்படும். தேர்தல் முடிந்தவுடன் ஏழை குடும்பங்களுக்கு 2 ஆயிரம் வழங்கப்படும்" என்றார்.