‘வாக்கை செலுத்திவிட்டு பணிக்கு வருகிறோம்’- தேர்தல் அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆசிரியர்கள் அதிருப்தி | Teachers are dissatisfied with the negligence of election officials

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (14/04/2019)

கடைசி தொடர்பு:08:28 (14/04/2019)

‘வாக்கை செலுத்திவிட்டு பணிக்கு வருகிறோம்’- தேர்தல் அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆசிரியர்கள் அதிருப்தி

 

அரசு ஊழியர்கள்

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காகத் தமிழக வாக்காளர்கள் மிக எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். மேலும் முன்னதாக தேர்தல் பணியாற்ற இருக்கும் அரசு ஊழியர்கள், தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தேர்தல் நாளன்று தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதால் அவர்கள், தமிழகம் முழுவதும் தபால் மூலம் தங்களின் வாக்குகளைச் செலுத்தி வருகிறார்கள்.ஆனால் அரசு ஊழியர்கள் தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க மாட்டார்கள் எனத் தமிழக அரசு நினைப்பதாக அரசு ஊழியர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகிறார்கள். அதனால் அரசு ஊழியர்களுக்காக வழங்கப்படும் தபால் வாக்குச்சிட்டு படிவங்கள் வழங்காமல் இழுத்தடிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இந்நிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தபால் ஓட்டுப் போடுவதற்கான படிவம் கடந்த    7-ம் தேதி  வழங்கப்பட்டது. பயிற்சி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக வாக்குப் பெட்டியில் அவர்கள் வாக்களித்தனர். அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக விடுபட்ட அரசு ஊழியர்களுக்கு வாக்குச்சிட்டு வழங்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில் திருச்சியில் கடந்த இரண்டு நாட்களாகத் தேர்தல் பணியில் ஈடுபடும் திருச்சி மாநகரத்தைச் சேர்ந்த 1,720 போலீசார் தங்களது தபால் வாக்குப்பதிவைத் திருச்சி கலையரங்கம் வளாகத்தில் செலுத்தினர்.

தபால் வாக்கு செலுத்த வந்த அரசு ஊழியர்கள்

தபால் வாக்குகளைச் செலுத்த வந்த போலீசார் தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் காவல்துறை அடையாள அட்டையுடன் வந்து தபால் வாக்குசீட்டை பெற்று அரசு அதிகாரியிடம் கையொப்பம் பெற்று, அங்கு அமைக்கப்பட்டு இருந்த மறைவான இடத்தில் வாக்கினைச் செலுத்தி அங்குள்ள பெட்டியில் போட்டனர். ஆண் போலீசார் ஒரு வரிசையிலும், பெண் போலீசார் ஒரு வரிசையிலும் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

இந்நிலையில் அந்த படிவத்தை வாங்கி வாக்கு செலுத்துவதற்காக திருச்சி மாவட்டம் முழுவதும் இருந்து, பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 1500 க்கும் மேற்பட்ட கல்லூரி மற்றும் பள்ளி கல்வி ஆசிரியர்கள் திருச்சிக்கு வந்திருந்தார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலானோருக்கு தபால் வாக்கு வடிவங்களில் வழங்கப்படவில்லை.இதனால் கோபமடைந்த அரசு ஊழியர்கள், இதுகுறித்து அங்கு இருந்த  தேர்தல் அலுவலர்களிடமும் முறையிட்டும் சரியான பதில் இல்லை. இதனால் கடுப்பான பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து அங்கு வந்த திருச்சி மாவட்ட நாடாளுமன்றத் தேர்தல் பார்வையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து திருச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் பார்வையாளர் அமித்குமார் இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் கவனத்தில் எடுத்துச் செல்வதாகவும் கூறினார். ஆனாலும் ஆசிரியர்கள் திருப்தி அடையவில்லை.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய ஆசிரியர்கள்,"இந்த தேர்தலில் நாங்கள் வாக்களிக்கக் கூடாது என்பதில் அரசு மிகத் தெளிவாக காய்நகர்த்தி வருகிறது. திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருக்கும் எங்களை வாக்கு சீட்டு வழங்குவதாகத் திருச்சிக்கு வரவழைத்த வைத்துவிட்டு, இப்போது படிவங்கள் இல்லை. குறைவாகத்தான் படிவங்கள் உள்ளது என  அதிகாரிகள் அலட்சியமாகப் பதில் கூறுகிறார்கள்.  இதுகுறித்து தேர்தல் பொறுப்பாளரிடம் முறையிட்டும் முறையான பதில் இல்லை. தமிழக அரசு திட்டமிட்டு அரசு ஊழியர்களின் வாக்கு உரிமையைப் பறிக்கும் எண்ணத்துடன் செயல்படுகிறது.

நாங்கள் தபால் வாக்கு போட வேண்டாம் என்று நினைத்து எங்கள் வாக்குரிமையைப் பறித்தால், தேர்தல் அன்று, எங்கள் சொந்த ஊரில் வாக்கைச் செலுத்தியபிறகே தேர்தல் பணிக்கு செல்ல முடிவெடுத்துள்ளோம். அப்படிச் செய்தால், தேர்தல் நடத்துவது பாதிக்கப்படும்" என எச்சரித்தார்கள்.அரசு ஊழியர்களுக்குத் தபால் வாக்கு சீட்டு தராமல் இழுத்தடித்தால் சொந்த ஊரில் வாக்களித்துவிட்டு, தேர்தல் பணி மேற்கொள்வோம் என அறிவித்துள்ளது பெரும்பரபரப்பை உண்டாக்கியுள்ளது,