நலிந்த நடிகர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர் ரித்தீஷ் - நகைச்சுவை நடிகர்கள் உருக்கம் | Comedy Actors speaks About Actor Ritheesh

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (14/04/2019)

கடைசி தொடர்பு:08:30 (14/04/2019)

நலிந்த நடிகர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர் ரித்தீஷ் - நகைச்சுவை நடிகர்கள் உருக்கம்

நலிந்த நடிகர்களின் வாழ்வில் ஒளியேற்றிய விளக்கு அணைந்து விட்டது என மறைந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் குறித்து நகைச்சுவை நடிகர்கள் உருக்கத்துடன் கூறினர்.

மறைந்த நடிகர் ரித்திஷ்

நடிகரும், முன்னாள் எம்.பி-யுமான ஜே.கே.ரித்தீஷ் நேற்று மாலை ராமநாதபுரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் சதன் பிரபாகரன் ஆகியோருக்கு ஆதரவு திரட்டும் வகையில் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி பகுதிகளில் உள்ள கிராமங்களில் ரித்தீஷ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார், இவருடன் நகைச்சுவை நடிகர்கள் போண்டா மணி, விஜய் கணேஷ், சுப்புராஜ் ஆகியோரும் கடந்த 4 நாட்களாகப் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.  நேற்று பரமக்குடி தொகுதியில் உள்ள போகலூர் ஒன்றியத்தில் நகைச்சுவை நடிகர்களுடன் ஜே.கே.ரித்தீஷும் பங்கேற்றார்.

இதன்  பின்னர் மதிய உணவுக்காக ராமநாதபுரம் ராஜா சேதுபதி நகரில் உள்ள ரித்தீஷின் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு உணவு உண்ட நகைச்சுவை நடிகர்கள் மூவரும் அடுத்து பிரசாரத்திற்கு செல்லக் காத்திருந்த நிலையில் ரித்தீஷ் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையறிந்த அவர்கள் ரித்தீஷின் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கதறினர்.

நகைச்சுவை நடிகர்கள்

 சோகத்துடன் ரித்தீஷின் வீட்டு வாசலில் அமர்ந்து இருந்த நகைச்சுவை நடிகர்கள் போண்டா மணி, விஜய் கணேஷ், சுப்புராஜ் ஆகியோர், ரித்தீஷ் குறித்து கூறுகையில் ''திரைத்துறை மற்றும் நாடகத்துறையில் நலிந்த பல கலைஞர்களுக்கு எண்ணிலடங்கா உதவிகள் செய்து அவர்களின்  வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர். உதவி என யார் வந்தாலும் அள்ளிக் கொடுத்த வள்ளல் அவர். எங்களைப் போன்ற சிறிய கலைஞர்களுடன் வித்தியாசம் இன்றி பழகியவர். எத்தனையோ பேருக்கு வெளியில் சொல்லாமல் உதவி அளித்து அவர்களின் வாழ்வில் நிம்மதி அடையச் செய்தவர். அத்தகைய வள்ளலை இழந்ததன் மூலம் நாங்களும் நிம்மதி இழந்து தவிக்கிறோம்'' என்றனர்.