‘ஒரு மணி நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே’ - ஜே.கே.ரித்தீஷ் உடலுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அஞ்சலி | Minister Vijayabaskar paid tribute to JK Ritish's

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (14/04/2019)

கடைசி தொடர்பு:13:05 (15/04/2019)

‘ஒரு மணி நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே’ - ஜே.கே.ரித்தீஷ் உடலுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அஞ்சலி

 ராமநாதபுரம் வந்த அமைச்சர் விஜயபாஸ்கருக்கு விருந்தளித்து உபசரித்த வழியனுப்பி வைத்த ஒரு மணி நேரத்திலேயே ரித்தீஷ் உயிரிழந்த சம்பவம் அமைச்சரைச் சோகத்தில் ஆழ்த்தியது.

அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவரான சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ராமநாதபுரம் தொகுதியில் உள்ள அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். இதையடுத்து ராமநாதபுரம் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுடன் இணைந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அமைச்சர் விஜயபாஸ்கரும் மறைந்த முன்னாள் எம்.பி ரித்தீஷும் நெருங்கிய நண்பர்கள். விஜயபாஸ்கர் ராமநாதபுரம் வரும் போதெல்லாம் ரித்தீஷின் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

 இந்நிலையில் நேற்று ராமநாதபுரத்தில் நடந்த பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் விஜயபாஸ்கர் வந்திருந்தார். கூட்டம் முடிந்த பின் ராஜா சேதுபதி நகரில் உள்ள தனது வீட்டில் விஜயபாஸ்கருக்கு விருந்தளித்துள்ளார் ரித்தீஷ். விருந்து முடிந்த பின் மதுரை சென்ற விஜயபாஸ்கரை, சாலை வரை வந்து வழி அனுப்பி வைத்துள்ளார் ரித்தீஷ்.

 இந்நிலையில் திருப்புவனம் அருகே சென்று கொண்டிருந்த அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரித்தீஷின் இறப்பு  குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது காரினை ஓரமாக நிறுத்தச் சொல்லிவிட்டு காரில் இருந்தபடியே கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதன் பின் அங்கிருந்து உடனடியாக ராமநாதபுரம் வந்த அவர் ரித்தீஷின் உடலுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்.

 ஒன்றாக அமர்ந்து உணவு உண்ட கையின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் இப்படி ஆகிவிட்டதே என அமைச்சர் விஜயபாஸ்கர், ரித்தீஷின் நினைவுகளை மறக்க முடியாமலும், பேச முடியாமலும் கண் கலங்கியபடி அமர்ந்து இருந்தார்.