‘1000 கார்களில் முதல்வர் பறக்கிறார்; 4 கார்ல போற என்னைய பிடிக்கிறாங்க’- சினேகன் வேதனை | Makkal Needhi maiam Candidate Snehan ELection Campaign

வெளியிடப்பட்ட நேரம்: 10:06 (14/04/2019)

கடைசி தொடர்பு:10:06 (14/04/2019)

‘1000 கார்களில் முதல்வர் பறக்கிறார்; 4 கார்ல போற என்னைய பிடிக்கிறாங்க’- சினேகன் வேதனை

பிரசாரத்திற்கு 50கார்களில்  செல்லும் ஹெச்.ராஜாவையும், 100கார்களில்  செல்லும் கார்த்தி சிதம்பரத்தையும் பறக்கும் படை அதிகாரிகள் விட்டுவிட்டு, 4 கார்களில்  பிரசாரத்திற்குச் செல்லும் என்னை மட்டும் இத்தனைக் கார்களில் செல்லக்கூடாது என்று தடுக்கின்றனர் என வேதனையுடன் சிநேகன் பேசினார்.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வேட்பாளராக சிநேகன் போட்டியிடுகிறார். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங்குடி பகுதிகளில் பொதுமக்களிடம் சிநேகன் வாக்குகள் சேகரித்தார். அவருக்கு ஆதரவாக நடிகை ஸ்ரீபிரியா பிரசாரம் செய்தார். அப்போது சிநேகன் பேசும்போது, "ராஜா 50கார்களில்  பறக்கிறார் என்றால் சிதம்பரம் 100கார்களில், பொம்மை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆயிரம் கார்களிலும் பிரசாரத்திற்குச் செல்கின்றனர். நாங்கள் 4 கார்களை மட்டுமே வைத்து பிரசாரம் செய்கிறோம். இத்தனைக் கார்களில்  வலம் வரும் அவர்களை எல்லாம் கண்டுகொள்ளாத பறக்கும் படை அதிகாரிகள்,  4கார்களில்  செல்லும் எங்களை, இத்தனைக் கார்களில்  செல்லக்கூடாது என்று தடுக்கின்றனர். இதனால், பிரசாரம் செய்ய முடியாமல் தவிக்கிறோம்" என்றார்.

 

 அப்போது, பேசிய ஸ்ரீபிரியா, 'எண்ணம் போல்  தான் சின்னமும் அமைந்துள்ளது. இருளை அகற்றி உலகிற்கு வெளிச்சம் டார்ச் லைட் நமக்குக் கிடைத்திருக்கிறது. எனவே அனைவரும் நல்லவர்களான நம்மவர்களை மட்டும் தேர்ந்தெடுங்கள். பரிசு கொடுப்பவர்களுக்கு பரிசுப் பொட்டி கிடைத்திருக்கிறது. ஊழல் செய்து சிறையில் இருப்பவரின் பெயரைக் கூறி பொதுமக்களிடம் ஒட்டுக் கேட்கின்றனர். பொதுமக்களுக்கு இவர்களைப் பற்றி நன்கு தெரியும். ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியவர்கள் எல்லாம் இன்று கோடீசுவரர்களாக இருக்கிறார்கள்" என்றார்.