"கரூர் 'இந்திரா காந்தி' ஜோதிமணி; மோடி தம்பிதுரை!" - பிரசாரத்தில் கரூர் சின்னசாமி அதிரடி | Karur Chinnasamy Election campaign!

வெளியிடப்பட்ட நேரம்: 10:35 (14/04/2019)

கடைசி தொடர்பு:10:59 (14/04/2019)

"கரூர் 'இந்திரா காந்தி' ஜோதிமணி; மோடி தம்பிதுரை!" - பிரசாரத்தில் கரூர் சின்னசாமி அதிரடி

"கடந்தமுறை வாக்களித்து எம்.பியாக வெற்றிபெற வைத்த உங்களை சந்திக்காக தம்பிதுரையை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுத்தப் பாவத்தை போக்கிக்கொள்ள, வருகிற 18 ம் தேதி அனைவரும் மறக்காமல் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்" என்று முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி பேசினார்.

ஜோதிமணி


 தமிழகத்தில் வரும் 18 ம் தேதி மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக, தமிழகம் முழுக்க அனைத்துக் கட்சி வேட்பாளர்களும், அனல் பறக்கும் பிரசாரத்தில் குதித்திருக்கிறார்கள். அந்த வகையில், கரூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, மின்னாம்பள்ளி, அருகம்பாளையம், வெண்ணைமலை, பெரிய வடுகப்பட்டி, ஆத்தூர், நொச்சிப்பாளையம், டி.என்.பி.எல் காலனி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இப்பிரச்சாரத்தின் போது, கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் செந்தில்பாலாஜி மற்றும் தி.மு.க கட்சியின் மாநில விவசாய அணிச் செயலாளர் சின்னசாமி மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். அபோது பேசிய தி.மு.க மாநில விவசாய அணிச் செயலாளர் சின்னசாமி,
 

ஜோதிமணி பிரசாரம்

"24 மணி பொதுச்சேவை செய்யும் வேட்பாளர் கை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரான ஜோதிமணி. கைமாறு கருதாமல் செயலாற்றக்கூடிய வேட்பாளர் ஜோதிமணி. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் அவருடைய தாயார் இயற்கை எய்தினார். ஏற்கனவே தந்தையில்லாமல் அவர் கல்வி கற்று, இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்த ஜோதிமணி இப்பொழுது குடும்பரீதியாக அனாதையாக இருந்தாலும், அரசியலில் ஜோதிமணி ஒரு இரும்புப் பெண்மணி. எனவே நாங்கள் எல்லோரும் ஜோதிமணியை கரூர் இந்திரா காந்தி என்று அழைக்கிறோம்.

பாரத திருநாட்டின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எப்படி தைரியமானவர். யாருக்கும் பயப்படாத அவர் எதற்கும் அஞ்சாதவர். அதனால், அவர் இந்த இந்திய நாட்டில் பிரதமர் ஆனார். அதுபோல, கரூர் இந்திரா காந்தி என்று அழைக்கப்படுகிற ஜோதிமணி வெற்றி பெற, நீங்களெல்லாம் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இல்லாவிட்டால், கரூர் மோடியாக திகளும் தம்பிதுரை எம்.பி ஆகிவிடுவார். ஆகவே, மக்களை சந்திக்காத தம்பிதுரையை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுத்த பாவத்தைப் போக்க, வருகிற ஏப்ரல் 18-ஆம் தேதி அனைவரும் மறக்காமல் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்" என்று அதிரடியாகவும், சுவாரஸ்யமாகவும் பேசினார்.