விளை நிலங்களில் கெயில் குழாய் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு - நாகை போராட்ட களத்தில் சுயேட்சை வேட்பாளர்கள் | Independent candidates in Gail Protest

வெளியிடப்பட்ட நேரம்: 11:05 (14/04/2019)

கடைசி தொடர்பு:11:05 (14/04/2019)

விளை நிலங்களில் கெயில் குழாய் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு - நாகை போராட்ட களத்தில் சுயேட்சை வேட்பாளர்கள்

சீர்காழி அருகே விளை நிலங்களில் கெயில் குழாய் அமைக்க விவசாயிகள் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம். போராட்டத்தில் மக்களுடன் மக்களாக களம் இறங்கினர் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் சுயேட்சை வேட்பாளர்கள். 

போராட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள பழைய பாளையம் ஓ.என்.ஜி.சி.யில் இருந்து மேமாத்தூர் வரை இயற்கை எரிவாயு எடுத்துச் செல்ல விளைநிலங்கள் வழியே சுமார் 29 கிலோ மீட்டர் தொலைவிற்கு குழாய் பதிக்க கெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, இத்திட்டத்திற்கான பூமி பூஜை வேம்படி என்னும் கிராமத்தில் செய்யப்பட்டு, காவல்துறையினர் பாதுகாப்புடன் ராட்சத குழாய்களும் இறக்கப்பட்டன. எந்த ஒரு முன்னறிவிப்பின்றி பணி தொடங்கப்பட்டு உள்ளதாக குற்றஞ்சாட்டிய அப்பகுதி விவசாயிகள் மற்றும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தங்கள் கருத்தை கேட்கக்கோரி சீர்காழி காவல்நிலையத்தில் மனு அளித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று மீண்டும் நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள நாங்கூரில் ஆறுமுகம் என்பவரது வயலில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள இடத்தின் அருகிலேயே குழாய் பதிக்கும் பணிகளை கெயில் நிறுவனம் தொடங்கியது. இதனால் அச்சமடைந்த  விவசாயிகள் மற்றும் கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் பணிகளை நிறுத்த கோரியும் வயலில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கெயில் நிறுவன ஊழியர்கள் பணிகளை நிறுத்தினர். ஆனாலும் குழாய்களை அப்புறபடுத்த கோரி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 10க்கும் மேற்ப்பட்ட வேட்பாளர்கள் சுயேட்சைகளாக மக்களவை தேர்தலில் போட்டியிடுக்கின்றனர். அந்த சுயேச்சை வேட்பாளர்களும், நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தினரும் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து அங்கு நடைபெற்று வந்த மக்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். 

கெயில் போராட்டக்களம்

உடனடியாக, தகவல் அறிந்து வந்த சீர்காழி காவல் துறை துணை கண்காணிப்பாளர் வந்தனா தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் குழாய்களை அப்புறபடுத்தினால்  மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என கூறி பந்தல் அமைத்து போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் போலீசார் அங்கிருந்த குழாய்களையும் இயந்திரங்களையும்  அகற்றும் பணி  தொடங்கப்படும்  என  உறுதியளித்ததால்  பொதுமக்கள்  போராட்டத்தை  கைவிட்டு கலைந்து சென்றனர்.தேர்தல் நெருங்கியதால் வீதி வீதியாக பிரசாரங்களை செய்து தேர்தல் களத்தில் சுழன்று கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் தேர்தல்களம் செல்லாமல் மக்களின் போராட்ட களத்தில் இறங்கி விவாசயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சுயேட்சை வேட்பாளர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.