``நான் எதிர்க்கட்சி இல்லை; ஆனா என் வீட்டிலும் வருமானவரி சோதனை வந்ததே!” -சரத்குமார் பேட்டி | Sarathkumar press meet in kanniyakumari

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (14/04/2019)

கடைசி தொடர்பு:14:00 (14/04/2019)

``நான் எதிர்க்கட்சி இல்லை; ஆனா என் வீட்டிலும் வருமானவரி சோதனை வந்ததே!” -சரத்குமார் பேட்டி

``எதிர்க்கட்சியினரிடம்தான் சோதனை நடத்துவதாகக் கூறுகிறீர்கள். நான் எதிர்க்கட்சியாக இல்லை. என் வீட்டிலும் வருமானவரி சோதனை வந்ததே" என ச.ம.க. தலைவர் சரத்குமார் கூறினார்.

சரத்குமார்

தேர்தல் பிரசாரத்திற்காக கன்னியாகுமரி வந்திருந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள். கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறேன். அ.தி.மு.க. தலைமையிலான மெகா கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் முடிவு செய்துள்ளார்கள். மக்கள் ஆரவாரமாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. பல கட்சிகள், பல கொள்கை, கோட்பாடுகள், கருத்துகள் இருந்தாலும் ஒற்றுமையாக ஓரணியாக இணைந்து மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. தனித்துப் போட்டி என்று தொடக்கத்தில் கூறியிருந்தோம். ஜெயலலிதா இல்லாத இந்த தேர்தலில் தொடர்ந்து உங்கள் ஆதரவு வேண்டும் என அ.தி.மு.க.வினர் கேட்டார்கள். மாநில நிர்வாகிகளிடம் கேட்டு, இந்த முறை அ.தி.மு.க. அணிக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்தோம்.

சரத்குமார்

 

நாங்கள் தனித்து நின்று நான்கைந்து தொகுதிகளில் வெற்றிபெற்றாலும் தொங்கு நாடாளுமன்றம்தானே இருக்கும். அதனால்தான் எட்டு ஆண்டுகளாக இருக்கும் கூட்டணியில் தொடர்கிறோம். நாடு இப்போது இருக்கும் சூழலில் மோடிபோன்ற வலிமையான பிரதமர் வரவேண்டும். சட்டசபை தேர்தலில் போட்டியிடுவீர்களா எனக் கேட்கிறீர்கள். நாளை என்ன நடக்கும் எனச் சொல்லமுடியாது இல்லையா. தினகரன் போகும் இடங்களில் கூட்டம் வருவதாக நீங்கள் சொல்கிறீர்கள். கூட்டம் எல்லோருக்கும் வரும். சுதந்திர நாட்டில் கருத்து கேட்க மக்கள் வருவார்கள். வாக்களிப்பது அவர்கள் உரிமை. மத்தியில் வலுவான, நல்லாட்சி வரவேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது. தனியாக நின்று ஒன்று, இரண்டு சீட்டுகள் பெற்றால் பாரத பிரதமரை தேர்ந்தெடுக்க முடியாது. பெரும்பான்மை ஆட்சி அமையும்போதுதான் எந்த திட்டமாக இருந்தாலும் மக்களுக்குச் சென்றடையும். மாநிலத்திலும், மத்தியிலும் ஒத்த சிந்தனை கொண்ட ஆட்சி அமைய வேண்டும்.

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு மோடி கொடுத்த பதிலடியால், நாடு பலமாக இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள். கன்னியாகுமரி தொகுதியில் பல திட்டங்களை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்திருக்கிறார். வருமான வரி சோதனை எப்போது வேண்டுமானாலும் வரலாம். சட்டத்துக்கு உட்பட்ட சோதனை என்பதால் ரெய்டு வருபவர்களை வரக்கூடாது எனச் சொல்லமுடியாதே. எதிர்க்கட்சியினரிடம்தான் சோதனை நடத்துவதாகக் கூறுகிறீர்கள். நான் எதிர்க்கட்சியாக இல்லை. என் வீட்டிலும் வருமானவரி சோதனை வந்ததே.  வருமான வரித்துறை சோதனைக்கு வந்தால் அதைச் சூழ்ச்சி சதி என நினைக்கக்கூடாது.

ஆட்சிமாற்றம் ஏற்படும் என ஸ்டாலின் சொல்லிக்கொண்டேதான் இருப்பார். எந்த சூழ்நிலையிலும் முதல் அமைச்சராக ஸ்டாலினுக்கு வாய்ப்பே கிடையாது. ஆட்சி கவிழவேண்டும் என நினைக்கும் ஒருமனிதர் எப்படி நாட்டை ஆள முடியும். வாக்களித்த மக்கள் ஐந்தாண்டுக்கு இந்த ஆட்சி சிறப்பாக இருக்க வேண்டும் என்றுதானே வாக்களித்திருக்கிறார்கள். அப்புறம் இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரா எனக் கேட்கிறார்கள். அவர் மக்களால் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்தானே. எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்துதானே முதல்வரைத் தேர்ந்தெடுத்தார்கள். எனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவார்களா எனக் கேட்கிறீர்கள். தேர்தல் முடிந்து அதுபற்றி பேசுவோம். இப்போது எடுத்துக்கொண்ட தேர்தல் பணியைச்  சிறப்பாக செய்கிறேன். கடல் என்று இருந்தால் அலை இருந்துகொண்டே இருக்கும். அலைகள் ஓய்வதில்லை. எனவே மீண்டும் மோடிதான் பிரதமர் ஆவார்" என்றார்.