`ஓட்டுக்காக ரூ.650 கோடி விநியோகம்; ஓ.பி.எஸ் உள்பட 3 பேர் டீலிங்!’ - ஸ்டாலின் குற்றச்சாட்டு | Stalin alleges admk distributes 650 crore rupees for voters

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (14/04/2019)

கடைசி தொடர்பு:16:40 (14/04/2019)

`ஓட்டுக்காக ரூ.650 கோடி விநியோகம்; ஓ.பி.எஸ் உள்பட 3 பேர் டீலிங்!’ - ஸ்டாலின் குற்றச்சாட்டு

‘‘அ.தி.மு.க கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுக்காக ரூ.650 கோடி விநியோகம் செய்திருப்பதாக’’ தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

குடியாத்தத்தில் பிரசாரம்செய்த தி.மு.க தலைவர் ஸ்டாலின்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளரான துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் மற்றும் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் காத்தவராயனை ஆதரித்து, குடியாத்தத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். அப்போது பேசிய ஸ்டாலின், ‘‘மத்தியில் சர்வாதிகார ஆட்சி, மாநிலத்தில் உதவாக்கார ஆட்சி நடக்கிறது. மோடியும் எடப்பாடியும் கட்டிப்பிடித்து கையை குலுக்கிக்கொண்டு கூட்டணி அமைத்திருக்கிறார்கள். ஜாடிக்கு ஏற்ற மூடி என்பதைப் போல் மோடிக்கு ஏற்ற மூடியாக எடப்பாடி இருக்கிறார். இந்தத் தேர்தலில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப் போகிறோம். 

குடியாத்தத்தில் பிரசாரம்செய்த தி.மு.க தலைவர் ஸ்டாலின்

நான் எதிர்த்துப்பேசினால் காது ஜவ்வு அறுந்துவிடும் என்று எடப்பாடி சொல்கிறார். இதோடு, உங்கள் அரசியல் வாழ்க்கைக்கான ஜவ்வு அறுந்துபோகப் போகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் ஓட்டுக்காக ரூ.650 கோடி விநியோகம் செய்திருப்பதாக ‘தி வீக்’ ஆங்கில வாரப் பத்திரிகையில் செய்தி வெளியாகியிருக்கிறது. மின்துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன், வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த வைத்தியலிங்கம், இப்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூவரும்தான் டீல் செய்திருக்கிறார்கள். எஸ்.ஆர்.எஸ் மைனிங் நிறுவனத்தில் வருமானவரித் துறை நடத்திய சோதனையில் ரூ.650 கோடி விநியோகம் செய்ததற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளதாம்.

ஆங்கில வாரப்பத்திரிகையை காட்டிய ஸ்டாலின்

பிரதமர் அலுவலகத்தில் அந்த ஆவணங்கள் இருப்பதாகவும் ஆங்கில வாரப் பத்திரிகையில் ஆதாரத்துடன் செய்தி வந்திருக்கிறது. பி.எஸ்.கே குரூப்பில் நடத்தப்பட்ட ஐ.டி ரெய்டில், குட்கா விவகாரத்தில் முதல்வர், துணை முதல்வருக்கு மாமூல் கொடுத்திருப்பதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன. குட்கா விவகாரத்தில் ஏற்கெனவே கரூர் அன்புநாதன், செய்யாதுரை, விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு நடந்திருக்கிறது. இதையெல்லாம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், அவர்களே பணத்தை கொண்டுவந்து வைத்து நாடகம் நடத்தி தி.மு.க-வின் வெற்றியைத் தடுக்கப்பார்க்கிறார்கள். நாற்பதும் நமதே. 22 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க வெற்றிபெறுவது உறுதி’’ என்று தெரிவித்தார்.