`கேப்டனுக்காக ஜெயலலிதாவை வாக்குக் கேட்கச் சொன்னவர் அமைச்சர் சி.வி.சண்முகம்!' - பிரேமலதா விஜயகாந்த் | Premalatha vijayakanth election campaign in villupuram

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (14/04/2019)

கடைசி தொடர்பு:17:20 (14/04/2019)

`கேப்டனுக்காக ஜெயலலிதாவை வாக்குக் கேட்கச் சொன்னவர் அமைச்சர் சி.வி.சண்முகம்!' - பிரேமலதா விஜயகாந்த்

”கேப்டனுக்காக ஜெயலலிதாவை வாக்குக் கேட்கச் சொன்னவர் அமைச்சர் சி.வி.சண்முகம்” என்று தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார். 

பிரேமலதா விஜயகாந்த்

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் வடிவேல் ராவணனுக்கு வாக்கு சேகரித்து இன்று பிரசாரத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ”நான் இன்று விழுப்புரம் போவதாக கேப்டனிடம் கூறினேன். அப்போது அவர் உங்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை சொல்லச் சொன்னார். கேப்டன் உங்கள் அனைவரையும் கேட்டதாகக் கூறினார். விழுப்புரம் மாவட்டம் என்றுமே கேப்டனின் கோட்டைதான் என்பதை நிரூபிக்க வேண்டும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்டு, அம்மாவால் வழி நடத்தப்பட்ட அ.தி.மு.கவும், நமது கேப்டன் புரட்சிக் கலைஞரால் ஆரம்பிக்கப்பட்ட தே.மு.தி.கவும் 2011-ல் கூட்டணி வைப்பதற்கு முன்பிருந்தே கேப்டன் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருப்பவர் அண்ணன் சி.வி.சண்முகம். அதேபோல அவர் மீதும் கேப்டன் அவர்களுக்கும், தே.மு.தி.கவுக்கும் தனி மரியாதை உண்டு.

நம் கேப்டன் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டபோது, புரட்சித் தலைவி அம்மாவிடம் சென்று அவருக்காக வாக்குக் கேட்கச் சொன்னவர் அண்ணன் சி.வி.சண்முகம் அவர்கள். 2011-ல் அமைந்த ராசிக் கூட்டணி தற்போது மீண்டும் அமைந்திருக்கிறது. இந்தக் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்று, அனைத்து வேட்பாளர்களும் டெல்லிக்குச் செல்வது உறுதி என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல 18 இடைத்தேர்தல் தொகுதிகளிலும் நம் வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருப்பதுடன், தொடரப் போகும் இந்த ஆட்சிக்கு இந்தக் கூட்டணியின் ஆதரவு என்றைக்கும் உண்டு என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரேமலதா விஜயகாந்த்

தமிழக முதல்வரும், துணை முதல்வரும், பா.ம.க நிறுவனர் ஐயா அவர்களும் சிறந்த முறையில் பாடுபட்டு இந்த அமோகமான கூட்டணியை உருவாக்கியிருக்கிறார்கள். நாளை மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை உள்ளிட்ட இடங்களில் நமது கேப்டன் பிரசாரம் செய்ய இருக்கிறார். இந்த முறை நரேந்திர மோடி ஆட்சி அமைக்கப்போவது உறுதி. அந்த வகையில் நமது 40 எம்.பிக்களும் டெல்லி சென்று நம் தொகுதிகளுக்குத் தேவையான வசதி வாய்ப்புக்களை உரிமையோடு பெற்றுக் கொண்டு வருவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து வேண்டாம்.

நம்மை எதிர்த்துப் போட்டியிடும் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி மக்களால் புறக்கணிக்கப்பட்ட கூட்டணி. தமிழினப் படுகொலைக்குக் காரணமாக இருந்த தி.மு.க – காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழக மக்கள் ஒரு ஓட்டுக்கூட போட மாட்டார்கள். தொப்புள் கொடி உறவான தமிழ் மக்களின் இனப் படுகொலைக்குக் காரணமான கூட்டணி தி.மு.க – காங்கிரஸ் என்பதை தமிழ் மக்கள் யாரும் மறக்கவில்லை. அவர்களுடையது ஸ்பெக்ட்ரம் மற்றும் காமன்வெல்த் ஊழல் கூட்டணி. ஆனால் நம் கூட்டணி அதிக வாக்கு வங்கிகளை வைத்திருக்கும் இளைஞர்களின் கூட்டணி.

பிரேமலதா விஜயகாந்த்

விழுப்புரம் தொகுதியில் இருந்து அண்ணன் வடிவேல் ராவணன் அவர்கள் வெற்றிபெற்று டெல்லிக்குச் செல்லப்போவது உறுதி. அவருக்கு ஃப்ளைட் டிக்கெட்டை இப்போதே ரிசர்வ் செய்துவிடலாம். நம் கூட்டணி இயற்கையான கூட்டணி. பூவும், இலையும், பழமும் இணைந்த வெற்றிமுரசுக் கொட்டப் போகும் கூட்டணி. எதிரணிக்கு நீங்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். ஏன் இதைக் கூறுகிறேன் என்றால், கேப்டனைத் தொட்டவர்களின் நிலைமை என்னவென்பதை துரைமுருகனைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அன்று கேப்டனையும், தே.மு.தி.கவையும் அசிங்கப்படுத்த வேண்டும் என்று நினைத்த துரைமுருகன், இன்று ஏன் நாம் வாயைத் திறந்தோம் என்று அழுது கொண்டிருக்கிறார். அதனால் கேப்டனைத் தொட்டவர்களின் நிலைமை இதுதான் என்பது தமிழகத்தில் அனைவருக்கும் தெரியும். அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பதற்கு அச்சாரமாக இந்தக் கூட்டணி வெற்றிபெறப் போவது உறுதி. மாநிலத்திலும், மத்தியிலும் நமது கூட்டணி ஆட்சிதான்” என்று முடித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க