`8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும்!' - ராமதாஸ் முன்னிலையில் நிதின் கட்கரி பேச்சு | salem - chennai express way project will be on cards, says Minister Nitin Gadkari

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (14/04/2019)

கடைசி தொடர்பு:17:00 (14/04/2019)

`8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும்!' - ராமதாஸ் முன்னிலையில் நிதின் கட்கரி பேச்சு

``சேலம் டூ சென்னை 8 வழி பசுமைச் சாலை இப்பகுதியின் முன்னேற்றத்திற்கு முக்கியமானது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு கொடுக்கப்படும். விவசாயிகளிடம் கலந்து பேசி 8 வழிச் சாலை திட்டத்தைச் செயல்படுத்துவோம். இத்திட்டத்தில் முதல்வர் மிகுந்த அக்கறைக் காட்டி வருகிறார். அதனால் இந்த பசுமை வழிச் சாலை நிறைவேற்றப்படும்'' என்றார் மத்திய நீர் வழி மற்றும் தரை வழிதுறை அமைச்சர் நிதின் கட்காரி.

கூட்டத்தில் பேசும் நிதின் கட்கரி

சேலம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் சரவணனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிரசாரம் பொதுக்கூட்டம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குச் சிறப்பு அழைப்பாளராக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியும், கூட்டணி கட்சி பா.ம.க தலைவர் ராமதாஸூம் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ``மோடி ஜீ மீண்டும் பிரதமராவது உறுதி. அதேபோல தமிழ்நாட்டிலும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க வெற்றிபெற்று எடப்பாடி பழனிசாமி தனி பெரும்பான்மையோடு முதல்வர் ஆவதும் உறுதி. இது வெற்றிக் கூட்டணி, மெகா கூட்டணி'' என்றார்.

அடுத்துப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``மத்தியில் திறமையான பிரதமர் வர வேண்டும் என்பதற்காக இந்த வெற்றிக் கூட்டணியை அமைத்திருக்கிறோம். சேலத்தில் சரவணன் வெற்றி உறுதி. ஆனால் பல லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். சேலத்திற்கு வந்த ஸ்டாலின், `அ.தி.மு.க அரசு என்ன செய்தது?' என்று கேட்கிறார். நான் சேலத்திற்கு என்ன செய்தேன் என்பதற்குச் சாட்சியாக பாலங்கள் இருக்கு. ஸ்டாலின் பிரசாரக் கூட்டத்தில், `தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி வாழ்க்கையும் கிழியும்' என்று பேசுகிறார். இப்போது சொல்லுகிறேன், தேர்தலுக்குப் பிறகுதான் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கையே தொடங்கும்' என்றவர், ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் உட்காரும் கனவு எக்காலத்திலும் பலிக்காது. சேலம் மக்கள் விசுவாசமான மக்கள். எனக்குத் கிடைக்கும் பெருமை உங்களுக்குக் கிடைக்கும் பெருமையாக நினைக்கிறேன். இங்கு ஒரு தொண்டனாக, உங்களில் ஒருவனாகப் பேசுகிறேன். அ.தி.மு.க வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டும்'' என்றார்.

இறுதியாகப் பேசிய நிதின் கட்காரி, ''தமிழ்ப் புத்தாண்டு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் நீர் வளத்துறையில் இருப்பதால் நீரைப் பெறுவதன் அவசியம் எனக்குத் தெரியும். நநி நீர் பிரச்னை இந்தியாவில் பல மாநிலங்களில் இருக்கிறது. நீர் அதிகமாக உள்ள மாநிலத்தில் இருந்து நீர் பற்றாக்குறையாக்க உள்ள மாநிலத்திற்குக் கொண்டு செல்லுவதைப் பற்றி ஆலோசனை செய்து கொண்டிருக்கிறோம். முதலில் தமிழகத்தில் அதை நடைமுறைப்படுத்துவோம்.

எடப்பாடி பழனிசாமி, நிதின் கட்கரி, ராமதாஸ்

கோதாவரியில் இருந்து 1,100 டி.எம்.சி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. கோதாவரி கிருஷ்ணா நதி நீர் இணைப்பு மேற்கொண்டோம். அடுத்து கோதாவரி காவிரி நதி இணைப்பை 60,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சீரிய முயற்சியால் தொடங்க இருக்கிறோம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று அ.தி.மு.க வேட்பாளரை வெற்றிபெறச் செய்து டெல்லிக்கு அனுப்பி வையுங்கள். இதுதான் நமக்குள் இருக்கும் ஒப்பந்தம்.

தமிழ்நாட்டில் தொழில் முனைவோருக்கு நீர், மின்சாரம், போக்குவரத்து, தொலைதொடர்பு வசதிகள் கிடைக்க வேண்டும். முதல்வரால் தமிழ்நாடு  மிகப்பெரிய வளர்ச்சி அடைகிறது. அதற்குப் பிரதமரும், அவருடைய அமைச்சரவையும் அனைத்து உதவிகளும் செய்கிறது. தற்போது தேர்தலுக்கு அமைந்திருக்கும் கூட்டணி மிக பொருத்தமான கூட்டணியாக அமைந்திருக்கிறது.

சேலம் டூ சென்னை 8 வழி பசுமைச் சாலை இப்பகுதியின் முன்னேற்றத்திற்கு முக்கியமானது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு கொடுக்கப்படும். விவசாயிகளில் கலந்து பேசிச் செயல்படுத்துவோம். இத்திட்டத்தில் முதல்வர் மிகுந்த அக்கறைக் காட்டி வருகிறார். அதனால் இந்த பசுமை வழிச் சாலை நிறைவேற்றப்படும்'' என்றார்.

அமைச்சரின் பேச்சை மேடையில் அமர்ந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், பா.ம.க நிறுவன தலைவர் ராமதாஸூம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதைத் தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர், '' நீரின் அவசியத்தைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். விவசாயிகள் 10,000 பேர் தற்கொலை செய்து கொண்ட மகாராஷ்டிராவின் விதர்பாவில் இருந்து நான் வந்திருக்கிறேன். எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள்'' என்றார்.