மோடி, எம்.ஜி.ஆர் படங்களுடன் பி.ஜே.பிக்கு வாக்குக்கேட்ட முதியவர் கொலை! - தஞ்சை டிரைவர் கைது | Tanjore driver arrested for killing bjp supporter

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (14/04/2019)

கடைசி தொடர்பு:17:40 (14/04/2019)

மோடி, எம்.ஜி.ஆர் படங்களுடன் பி.ஜே.பிக்கு வாக்குக்கேட்ட முதியவர் கொலை! - தஞ்சை டிரைவர் கைது

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரத்தநாட்டில்  பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட முதியவரை வாலிபர் ஒருவர் மோடி உங்களுக்கு என்ன செய்தார் என கேள்வி கேட்டதால் இருவரும் கடும் வாக்கு வாதம் ஏற்ப்பட்டது. இதில் அந்த வாலிபர் முதியவரை தாக்கியதில் அவர் இறந்து விட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவிந்தராஜ்

ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடைப் பண்ணையில் அலுவலக ஊழியராக வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். இவர் பா.ஜ.க.,மீது  மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என கூறப்படுகிறது. இவர் மோடி படத்தை கழுத்தில் மாட்டி கொண்டு, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படத்தை பேட்ஜ் போல் சட்டையில் குத்திக் கொண்டு நாடாளுமன்ற  தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு கேட்டு வந்துள்ளார்.

ஒரத்தநாடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தனியாளாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். செல்லும் இடங்களில் பார்ப்பவர்கள் எல்லோரிடமும் மோடிக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்டுள்ளார். இந்தநிலையில் கோவிந்தராஜ், ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே நேற்று இரவு மோடியின் படத்தை கழுத்தில் மாட்டி  கொண்டு பா.ஜ.க.,விற்கு ஆதரவாக பிரசாரம் செய்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு நின்ற கண்ணந்தங்குடி மேலையூரை சேர்ந்த டிரைவரான கோபிநாத்  என்பவர், `மோடி உங்களுக்கு என்ன செய்தார். எதற்கு மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறீர்கள்' என கோவிந்தராஜிடம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது.

கோவிந்தராஜ்

இதனை தொடர்ந்து வாக்குவாதம் முற்றியதில் கோபிநாத் ஆத்திரம் அடைந்து கோவிந்தராஜைக் கடுமையாக தாக்கியுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் கோவிந்தராஜை மீட்டு அவர் வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளனர். கொஞ்ச நேரத்திற்கு பிறகு அவருக்கு நெஞ்சவலி ஏற்பட்டு மயங்கியுள்ளார். பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கோவிந்தராஜ்  இறந்து விட்டார்.

இதுபற்றி கோவிந்தராஜ் மகள் அற்புதா ஒரத்தநாடு போலீஸில் புகார் செய்தார். போலீஸாரும் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இதனையடுத்து அ.ம.மு.க பிரமுகரான  கண்ணந்தங்குடி மேலையூரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் சண்முகம் கோபிநாத்தை போலீஸில் ஒப்படைத்தார். பின்னர், கோபிநாத்தை போலீஸார் கைது செய்தனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க