'அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்கிறாங்க!' - உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்த செந்தில்பாலாஜி | senthil balaji staged protest

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (14/04/2019)

கடைசி தொடர்பு:18:20 (14/04/2019)

'அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்கிறாங்க!' - உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்த செந்தில்பாலாஜி

செந்தில் பாலாஜி உள்ளிருப்பு போராட்டம்

கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தி.மு.க கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மூன்று மணி நேரத்திற்கு மேலாக இந்த உள்ளிருப்பு போராட்டம் நடப்பதால், பாதுகாப்புக்காக 50 க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அ.தி.மு.க சார்பில் தம்பிதுரையே மறுபடியும் வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார். தம்பிதுரைக்கு வாக்கு கேட்டு போகும் இடங்களில் எல்லாம் கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. ஆனால், ஜோதிமணிக்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதாக சொல்லப்படுகிறது.

உள்ளிருப்பு போராட்டம்

இந்நிலையில், லிங்கமநாயக்கன்பட்டி பகுதியில் ஜோதிமணி தரப்பு பிரசாரத்தில் ஈடுப்படிருந்தபோதும், அ.தி.மு.கவை சேர்ந்த இரண்டு நபர்கள், 'இலங்கையில் தமிழர்களை கொன்றுக்குவித்த சின்னத்திற்கு ஓட்டுப்போடாதீங்க' என்று கோஷம் போட்டார்கள். அப்போது, தி.மு.கவினர் அந்த இரண்டு நபர்களையும் தாக்கினர். இந்நிலையில், 'எங்களை கொலை செய்யும் நோக்கத்தோடு தம்பிதுரையும், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் இவர்களை கத்தியுடம் அனுப்பி இருக்கிறார்கள். தோல்வி பயத்தில் இப்படி செய்கிறார்கள்' என்று செந்தில் பாலாஜியும், ஜோதிமணியும் அதிரடியாக பேட்டியளித்தனர். இதற்கிடையில், 'கரூர் நகர டி.எஸ்.பியாக இருக்கும் கும்மராஜா, மூன்று வருடங்களுக்கு மேலாக கரூரில் பணிபுரிகிறார்.

உள்ளிருப்பு போராட்டம்

ஆளுங்கட்சிக்கு சார்பாக நடந்துகொள்கிறார். அவரை பணிமாற்றம் செய்யமறுக்கிறார்கள். அவரை பணிமாற்றம் செய்ய வேண்டும்' என்று செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். ஆனால், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், வரும் 16ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ளது. இதனை ஒட்டி, காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி வரும் 16 ம் தேதி கரூர் நகரப் பகுதியில் பிரசாரத்தினை நிறைவு செய்ய கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தியிடம் விண்ணப்பித்து இருந்தார்.

ஆனால், தற்போது வரை அதற்கான அனுமதியை வழங்காமல் அவர் இழுத்தடித்து வருவதாக கூறி, கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து, 'அனுமதி அளிக்கும் வரை எழுந்து செல்ல மாட்டோம்' எனக்கூறி, உள்ளேயே அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். கூடவே, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார். கடந்த மூன்று மணி நேரத்திற்கு மேலாக இந்த உள்ளிருப்புப் போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், சரவணமூர்த்தி இன்னமும் அனுமதி வழங்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் தி.மு.க, காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு உள்ளதால், பாதுகாப்புக்காக 50 க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.