`நீங்க கேட்ட அதேகேள்வியை நான் திரும்பக் கேட்கிறேன்!' - ஸ்டாலினிடம் எதிர்க்கேள்வி கேட்கும் தமிழிசை | Thoothukudi BJP candidate tamilisai slams DMK

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (14/04/2019)

கடைசி தொடர்பு:19:00 (14/04/2019)

`நீங்க கேட்ட அதேகேள்வியை நான் திரும்பக் கேட்கிறேன்!' - ஸ்டாலினிடம் எதிர்க்கேள்வி கேட்கும் தமிழிசை

"தூத்துக்குடி நான் பிறந்து வளர்ந்த மண். அதனால், இங்கு போட்டியிடுகிறேன். ஸ்டாலினின்  தங்கை கனிமொழி, எந்த தைரியத்தில் இங்கு வந்து போட்டியிடுகிறார்." என தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

டாக்டர் அம்பேத்கரின் 128-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி, பாளையைங்கோட்டை சாலையில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் பா.ஜ.க., வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் மாலை அணிவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``பிரதமர்  மோடி, டாக்டர் அம்பேத்கரின் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளார். அதற்கு எடுத்துக்காட்டாக பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள ஒரு புதிய செல்போன் செயலியை அவர் அறிமுகப்படுத்தினார்.

அந்த செயலிக்கு "பீம் ஆப்" என்று  பெயரிட்டார். அதேபோல் அரசியலமைப்பு "சட்ட புத்தகம்தான் எனது புனித நூல்" என பிரதமர் மோடி நாடாளுமன்றத்திலும்  பேசியுள்ளார். அதேபோல, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என,  பல திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி உள்ளார். கடந்த வருடம் அம்பேத்கரின் பிறந்தநாளை வருடம் முழுவதும்  கொண்டாடியது மத்திய அரசு. 

தமிழிசை

பேய்குளம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது,  இங்கு தி.மு.க., வேட்பாளர் கனிமொழி தத்தெடுத்துள்ள  வெங்கடேசுவரபுரம் கிராமத்தில், அவர் எந்தவித அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை எனவும்,  எந்தவித முன்னேற்றத்தையும் அந்த கிராமத்திற்கு கொடுக்கவில்லை எனவும் கிராம மக்கள் புகார் கூறினார்.

ஒரு கிராமத்தையே முன்னேற்ற முடியாதவர், எப்படி தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியை முன்னேற்றுவார்.  "தமிழிசை எந்த தைரியத்தில்  தூத்துக்குடியில் போட்டியிடுகிறார்" என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி எனது மண். நான் பிறந்து வளர்ந்த மண். இதே கேள்வியை நான் திருப்பிக் கேட்கிறேன். கனிமொழி எந்த தைரியத்தில் இங்கு வந்து போட்டியிடுகிறார்?.

நேற்று, தி.மு.க., டுவிட்டர் பக்கத்தில் தந்தை பெரியாரின் படத்தை எடுத்துவிட்டு பனைமரத்தின் படத்தினை வைத்திருக்கிறார்கள். தேர்தல் என்று வந்ததும் தி.மு.க.வின் கொள்கை எல்லாம் பறந்துவிட்டது. இதே செயலை வேறொரு தலைவர் செய்திருந்தால் தற்போது ஏகப்பட்ட கண்டன அறிக்கைகள் வந்திருக்கும். நாங்கள் அப்படியல்ல. நாங்கள் எல்லோருக்கும் மரியாதை செய்து கொண்டிருக்கிறோம்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து  நாகரிகம் இல்லாமல் பேசிவருகிறார். இந்தியாவின் காவலாளி என்று கூறப்பட்ட பிரதமர் மோடியை களவாணி என்பதும், விவசாயியான முதல்வர் எடப்பாடி பழனிசாமியை  விஷவாயு என்றும் ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். அவர் எதுகை, மோனையில் பேசுவதாக நினைத்துக்கொண்டு தொடர்ந்து ஏளனமாகவே பேசி வருகிறார். வேண்டுமானால், என்னுடன் வேண்டுமானால் அவரை எதுகை, மோனை போட்டியிட்டு பேசச் சொல்லுங்கள்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க