தேர்தல் பணிகளைத் தவிர்க்க அரசு ஊழியர்களின் `பலே ஐடியா'! | Government staffs and teachers escapes from election duty

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (14/04/2019)

கடைசி தொடர்பு:19:20 (14/04/2019)

தேர்தல் பணிகளைத் தவிர்க்க அரசு ஊழியர்களின் `பலே ஐடியா'!

நீலகிரி தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடுவதில் இருந்து தப்பிக்க விண்ணப்பங்களை அபேஸ் செய்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

தேர்தல் பயிற்சி

தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 684 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் சுமார் 3 ஆயிரத்து 500 முதல் 4 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு வேறு வேறு தொகுதிகளில் பணியாற்றுவார்கள். இந்த முறை தேர்தலை முன்னிட்டு பள்ளிகளில் முன்கூட்டியே அனைத்து தேர்வுகளும் முடிக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கு இரண்டு கட்டங்களாக பயிற்சிகள் அளிக்கப்பட்டது. தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை உறுதிப்படுத்தவும், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

தேர்தல் பயிற்சி

நீலகிரியில் உள்ள 3 தொகுதிகளும் மலைப்பகுதிகளிலும், வனப்பகுதிகள் நிறைந்த பகுதியாக உள்ளது. இங்குப் பழங்குடியின கிராமங்கள், வனத்தை ஒட்டியுள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தலைச் சிறப்பாக நடத்தக் கூடுதல் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பணியாற்ற உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே அந்தந்த துறைகள் மூலம் தேர்தல் பணியாற்றுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, அவை உடனடியாக பூர்த்தி செய்து பெறப்பட்டன.

இந்தநிலையில் தேர்தல் பணியில் ஈடுபட விரும்பாதவர்கள் தங்களது விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேர்தல் பிரிவிற்குக் கொண்டு செல்லும் முன்னரே அவற்றைக் கோப்புகளில் இருந்து எடுத்து விடுகின்றனர். சிலர் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து ஒப்படைப்பதையும் தவிர்ப்பதாகக் கூறப்படுகிறது. தேர்தல் பிரிவிற்கும் இவ்விவாகாரம் தெரியும் எனக் கூறப்படுகிறது. தேர்தல் பிரிவிற்கு செல்லும் விண்ணப்பங்கள் மட்டும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு சுழற்சி முறையில்  தேர்வுசெய்து செய்து தேர்தல் பணி உத்தரவு வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை அபேஸ் செய்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தேர்தல் பணிக்குச் செல்லாமல் மாவட்ட நிர்வாகத்தை ஏமாற்றுகின்றனர்.

தேர்தல் பயிற்சி

உடல்நிலை பாதிப்பு, பாலூட்டும் தாய்மார்கள் அல்லது இதர வேறு அவசர காரணங்களால் மட்டுமே தேர்தல் பணியாற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். திட்டமிட்டே தேர்தல் பணிக்குச் செல்வதை தவிர்க்க விண்ணப்பங்களை மொத்த கோப்புகளில் இருந்து உருவுவதால், போதிய பணியாளர்கள் இன்றி தற்போது, தொகுப்பூதியத்தில் பணியாற்றக் கூடிய தற்காலிகப் பணியாளர்களையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

இதுகுறித்து அரசுத் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ``அரசு ஊழியர்களில் சிலர் தங்களது செல்வாக்கை பயன்படுத்திப் பல வழிகளில் தேர்தல் பணிகளில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் பல இடங்களில் நடைபெறுகிறது. எனவே, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தால் நல்லது'' என்றார்.