தி.மு.க முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனிடம் ஆதரவு கேட்ட அன்புமணி! - தருமபுரி தேர்தல் களத்தில் திடீர் திருப்பம் | Anbumani seeking support from mullai vendhan

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (14/04/2019)

கடைசி தொடர்பு:19:40 (14/04/2019)

தி.மு.க முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனிடம் ஆதரவு கேட்ட அன்புமணி! - தருமபுரி தேர்தல் களத்தில் திடீர் திருப்பம்

தருமபுரி மாவட்ட தி.மு.க முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனை அவரது தோட்டத்தில் சந்தித்து அன்புமணி ராமதாஸ் ஆதரவு கேட்டுள்ள சம்பவம் தருமபுரி மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைவேந்தன் அன்புமணி

இந்த சந்திப்பு குறித்து விசாரித்தோம். கடந்த 2014 தருமபுரி நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குக் காரணம் காட்டி, தி.மு.க-வில் இருந்து முல்லைவேந்தன் தற்காலிகமாக நீக்கப்பட்டார். அப்போது தமிழகம் முழுவதும் தி.மு.க தோல்வி அடைந்தது. `தருமபுரி தோல்விக்கு நான் மட்டும் காரணமா?' என்று முல்லைவேந்தன், ஸ்டாலினுக்கு எதிராகக் கொதித்து எழுந்து குரல் உயர்த்தினார். அதன்பிறகு முல்லைவேந்தனை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். சிறிதுகாலம் அமைதி காத்த முல்லைவேந்தன், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தே.மு.தி.க-வில் இணைந்தார். பின்னர் அவர், ஸ்டாலினைக் குறி வைத்து பிரசாரம் செய்து வந்தார். அப்போது தி.மு.க தலைவர் கருணாநிதி கேட்டுக்கொண்டதாலும், அவர் மீது கொண்ட மரியாதையால் தே.மு.தி.க-வை விட்டு விலகி அமைதி காத்து வந்தார். தேர்தலுக்குப் பிறகு முல்லைவேந்தனை தி.மு.கவில் சேர்க்கக் கருணாநிதி பல முறை முயன்றபோதும் அதற்கு ஸ்டாலின் முட்டுக்கட்டையாக இருந்து வந்தார்.

முல்லைவேந்தன் அன்புமணி சந்திப்பு

இந்தநிலையில், கருணாநிதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையிலிருந்த சமயத்தில், முல்லைவேந்தன் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்துவிட்டு வந்தார். கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு அழகிரி தி.மு.க-வில் பலத்தைக் காட்ட முயலவும், முல்லைவேந்தனை தி.மு.க-வில் இணைத்துக் கொள்ள மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பரமணி மூலம் ஸ்டாலின் தகவல் அனுப்பினார் ஸ்டாலின். முல்லைவேந்தனும் பழைய கசப்பான அனுபவங்களை எல்லாம் மறந்து தி.மு.க-வில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார்.

தி.மு.க-வில் இணைத்துக் கொண்டாலும், முல்லைவேந்தனை சாதாரண உறுப்பினராகவே தி.மு.க தலைமை நடத்த ஆரம்பித்தது. முல்லைவேந்தன் மேடையில் பேசி கைதட்டல் வாங்கி விடுவார் என்ற காரணத்திற்காகவே தருமபுரியில் தி.மு.க மேடை கூட்டங்களை நடத்தாமல் தவிர்த்து வந்தது. இந்தநிலையில், நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வந்தது. அதில் முல்லைவேந்தன் சொந்தத் தொகுதியான பாப்பிரெட்டிபட்டிக்கும் இடைத்தேர்தல் என்பதால்,  தலைமையின் அனுமதியுடன் சீட்டுக்குப் பணம் கட்டலாம் என்று அறிவாலயம் சென்றார் முல்லைவேந்தன். ஆனால், ஸ்டாலினுடனான முல்லைவேந்தன் சந்திப்பு மிகவும் கசப்பான அனுபவத்தைத் தரவே, அன்றைய தினமே தி.மு.க வேட்டி மற்றும் வாகனத்தில் இருந்த கட்சிக் கொடியைக் கழற்றிவிட்டு, தனது சொந்த பணிகளைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்.

தி.மு.க தலைமையும் முல்லைவேந்தனுக்கு தேர்தல் தொடர்பான எந்த பொறுப்பு வழங்கவில்லை. ஆனால் முல்லைவேந்தன் ஆதரவு இருந்தால் கூடுதல் பலம் என்று எண்ணிய தி.மு.க வேட்பாளர்கள் அவரிடம் ஆதரவு கேட்டு வந்தனர். நான் தி.மு.க உறுப்பினர் எனது ஓட்டு சூரியனுக்குத்தான், பிரசாரத்திற்கு வர முடியாது எனப் பதில் தந்து அனுப்பிவிட்டார். இந்த சூழ்நிலையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள அ.தி.மு.க, அ.ம.மு.க வேட்பாளர்கள் ஆதரவு கேட்டு அவரது தோட்டத்தில் சந்தித்து வந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடைசியாகப் பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், தென்பெண்ணை ஆற்றுக் கால்வாய் திட்டம் குறித்த கோரிக்கை வைத்துள்ளார். அதை நிறைவேற்றித் தருவேன் என்று பிரசாரத்தில் வாக்குறுதி அளித்தார். இப்போது அன்புமணி முல்லைவேந்தனை சந்தித்து ஆதரவு கேட்டுள்ள சம்பவம் தருமபுரி தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து முல்லைவேந்தனிடம் பேசினோம், ``நான் தி.மு.க-வில் ஒரு சாதாரண உறுப்பினர், எனது ஆதரவும், ஓட்டும் சூரியனுக்குத்தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எனது வாக்கைப் பெற தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, அ.ம.மு.க வேட்பாளர்கள் வாக்கு கேட்டுவிட்டு செல்கின்றனர், அவ்வளவுதான்'' என்று முடித்துக் கொண்டார்.

முல்லைவேந்தன் இவ்வாறு கருத்து தெரிவித்தாலும், மாற்றுக் கட்சி வேட்பாளர்களை தொடர்ந்து சந்தித்து வருவது தி.மு.க-விற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்கின்றனர். மறுபக்கம் இதையெல்லாம் தி.மு.க தலைமையும் கவனித்து வருகிறது என்கிறார்கள்.